பெண்ணின்பெருமை

எங்கள் பரமேஸ்வரி குலதெய்வம் கோவிலுக்குள்ளே
பெண்களுக்கு அனுமதியில்லை.
அதற்கென்ன, சபரிமலையிலும்தான் இல்லை!
மாதவிடாயின் போது எந்தக் கோவிலிலும்
நுழைவு இல்லை.
ஏன் என்று யோசித்தேன்!
நமது மூதாதையர் என்ன அவ்வளவு அஞ்ஞானிகளா?
பெண்கள் என்றால் கிள்ளு கீரை, இழிவு பிறவி,
கீழ் ஜாதி, போகப்பொருள்,
பூசைக்கு ஏற்றவர் அல்ல என்ற ஏளனமா?
ஏன் என்ற கேள்வியை
பூதக் கண்ணாடியாக்கி,
பெண்ணின் வாழ்வை பரிசீலித்தேன்!
பிறந்தவுடனேயே பெற்றோருக்கு மன இறுக்கங்கள்;
பிராயம் அடையும் முன்னமேயே மற்றோரால் பாலியல் சில்மிஷங்கள்; .
தெருவில் நடந்தாலேயே தேள் கொட்டுவது போல பார்வைகள்,
மேனி மீது புழுவாய் ஊறும் ஆடவரின் மனக்கிலேசங்கள்;
சிரித்து பழகினாலேயே சித்தம் திரிபவர் கூட்டம்;
சிந்தனை இல்லாத அழகு பொம்மை
என்ற அனுமானத்தில் பிறரின் அணுகுமுறைகள்;
கடையில் காட்சி பொருளை போல்
கல்யாண சந்தையில் பேரம் -
ஏவல் செய்வதற்கு வேலை செய்பவர்
கொடுக்க வேண்டும் அட்வான்ஸ்;
வரதட்சணைக் கோட்பாடுகளைக் கடந்தால்,
பிறந்த வீட்டை புறக்கணித்து,
தன் ஊதியம் முதற்கொண்டு அர்ப்பணித்து,
கணவனோடு, கணவனுக்காக, கணவனின்
குடும்பத்தார் கருத்துக்கு இணங்கிய, தனக்கென்று
ஏதும் இல்லாளின், தர்மவதியின் இல்வாழ்க்கை;
கருவுற்று, கஷ்டப்பட்டு குழந்தைகளைப்
பெற்றெடுத்து, பெரியவர்களாக்கி,
அவர்கள் செய்யும் அட்டூழியங்களை பொறுத்து,
நல்வழியில் நடாத்தி, விவாகம் செய்வித்து,
பிள்ளைகள் பிரிந்தாலும், மறந்தாலும் ,
மனம் கோணாமல் வாழ்த்தி,
பேரன், பேத்தி என்று பாராட்டி..........
எப்பொழுதும் தனக்கென்று வாழாதவள் பெண்!
அவள் வாழ்வு ஒரு வேள்வி, ஓர் யக்ஞம்.
ஆத்ம தியாகம்.
'பெண்ணாக பிறக்கவில்லையே' - வருந்துகிறேன்.
பிறந்திருந்தால், அடுத்த பிறவியே இருந்திருக்காதே!
மோட்சம் அடைந்திருப்பேனே!
கோவில்கள் ஆண்களுக்காக மட்டுமே!
அடுத்த பிறவியிலாவது பெண்ணாக பிறக்க!
கோவில்கள் வெறும் படிக்கட்டுக்கள்தானே!
மலை உச்சிக்கு - பெண்ணுக்கு - அங்கு என்ன வேலை?