தமிழனுக்கென்று விடியலோ
வணக்கம்,
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கை சென்றதும், அங்கே இந்தியாவின் நிதியுதவியினால் கட்டப்பட்ட இலவச வீடுகளை தமிழர்களுக்கு வழங்கியதையும் நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இது வரவேற்க கூடிய விடயம்தான், இதற்காக இந்தியாவிற்கு நாம் நன்றி செலுத்துகிறோம். ஆனாலும் மனது இழப்பில் இருந்து இன்னும் மீள முடியாமலே தவிக்கிறது. நாங்கள் பொன்னையும், பெருளையும், இருப்பிடத்தையும், நூலகத்தையும், மருத்துவமனையையும் இழந்தோம் அதை எல்லாம் திருப்பி கட்டித் தருகிறீர்கள்.
ஆனால் நாங்கள் இழந்த உயிர்களையும், வாழ்க்கையையும், உரிமையையும், நீதியையும் யார் திருப்பி தருவது?. நாங்கள் யாரிடம் கேட்பது?. உலகிடம் கையேந்துகிறோம் ஒருவரும் தர முன்வரவில்லையே.
இலவச வீடுகளும், ரயில் போக்குவரத்தும், இலவச மிதிவண்டிகளும், எங்கள் உரிமையை பெற்றுத் தந்துவிடுமா?
மாடியில் வாழ்ந்தாலும் - தெருக்
கோடியில் வாழ்ந்தாலும்
நாங்கள்
உரிமையற்ற அடிமைகள்தானே...!
பொன்னையும் பொருளையும் எப்பொழுது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்வோம். எங்கள் உரிமையை நாங்கள் எப்படி சம்பாதித்துக் கொள்வது? ''மறுவாழ்வு திட்டங்கள் என்று சொல்லி எங்கள் உரிமையினை மறந்துவிட செய்கின்ற நிலையானது. ஆளும் அதிகார வர்க்கத்திற்கு எம்மை ஆயுள் அடிமைகளாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தை அல்லவா எழச்செய்கிறது.''
லட்சக்கணக்கான உயிர்களை இழந்து மீளமுடியாத துயரத்தில் கிடக்கின்றோம், உலக நாடுகளிடம் இதற்கு ஒரு நீதி பெற்றுத்தாருங்கள் என்று கையேந்தி பிச்சை கேட்கிறோம்,
நாங்கள் வாழ்க்கைப்பசிக்கு பிச்சைக் கேட்டால் - நீங்கள்
வயிற்றுப் பசிக்கு அல்லவா இடுகிறீர்கள்..!
நாங்கள் என்ன கேட்கிறோம், எங்களுக்கு எண்ணத் தேவை, எங்களுக்கான நிரந்தர தீர்வுதான் என்ன என்பதை இந்த உலகம் இதுவரை சிந்திக்கவே இல்லை என்பதுதான் மிகுந்த வலியாக இருக்கிறது.
எங்களுக்கு, வீடு தேவை, நூலகம் தேவை, தொடர்வண்டித் தேவை என்று எங்கள் தேவைகளை எல்லாம் நீங்களாகவே தீர்மானித்துக் செய்துகொள்கிறீர்கள். ஆனால் உண்மையிலேயே எங்களுக்கு தேவையானதை நாங்கள் கேட்டாலும் தர மறுக்கிறீர்கள்.
நாங்கள் இழந்ததோ
உயிர்களையும் உரிமைகளையும்
தன்மானத்தையும்...! - நீங்கள்
தருவதோ
உணவுகளையும் உபச்சாரங்களையும்,,,!
உங்கள் கண்முன்னால் நடந்த ஒரு அநியாயத்திற்கு நீங்கள் நீதிபெற்று தாருங்கள், அதுவே நீங்கள் எங்களுக்கு அளிக்கும் பெருவாழ்வாகும். என்றும் உங்களை நாங்கள் கையெடுத்து வணங்குவோம்.
நீதி என்பது இந்த உலகத்திற்கே பொதுவானது, அதை பகிரங்கமாகவே கேட்டாலும் கூட குற்றமில்லை, ''ஆனால் நாங்கள் கால்பிடித்து கேட்டுகொண்டு இருக்கிறோம் எங்களுக்கான நீதியை''.
நீதியைக்கூட கால் பிடித்துக் கேட்கவேண்டிய அவல நிலையில் இந்த உலகம் இருப்பதை நினைத்தால், மனிதநேயமற்ற ஒரு உலகில் பிறந்ததற்காய் வெட்கப்படவேண்டிய நிலைதான் தெரிகிறது.
காலம் காலமாக சிங்கள பேரினவாத வர்க்கத்தினால், ஏமாற்றப்பட்டு, தொடர்ந்து பல இன்னல்களை சந்தித்ததோடு, மீட்கவே முடியாத பல இழப்புகளையும் சந்தித்து, இன்றும் அந்த தீவிலே இரண்டாம்தர முடிமக்களாய் வெம்பி வேதனையில் கிடக்கின்றார்கள் ஈழத்தமிழர்கள். இவர்களுக்கு யார் நீதிபெற்று தருவது? இவர்களுக்கான தீர்வுதான் என்ன? இந்த கேள்விக்கான விடை யாரிடமும் இல்லை.
இந்த கேள்விகளுக்கு தெளிவான விடை தெரிந்தவர்களாக விடுதலைப்புலிகள் மட்டுமே இருந்தார்கள், ஆனால் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து இந்த உலகத்தின் துணையோடு அழித்து ஒழித்தது சிங்கள ராணுவம். போர் நடந்துகொண்டு இருக்கும்பொழுது புலிகள் ஒழிக்கப்பட்டவுடன் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வும், அரசியல் தீர்வும் அளிக்கப்படும் என்று சொன்ன இலங்கை அரசு, போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும்கூட அதற்காக இன்றுவரை எந்த ஒரு துரும்பையும் அசைக்கவில்லை. 13வது சட்டத்தை அமலாக்கம் செய்வோம் என்று இந்தியாவிற்கு வாக்களித்த இலங்கை அரசு அதை நடைமுறைபடுத்துவதற்கு பதிலாக, அந்த சட்டத்தில் உள்ள அதிகார கோப்பாடுகளை வலிமை இழக்கச்செய்யும் காரியத்தை மட்டுமே செய்ததேயொழிய அதையும் நிறைவேற்றியப் பாடில்லை. அதை நிறைவேற்றினாலும்கூட பெரிதாக பலனெதுவும் இல்லை என்பது மறுபக்க உண்மை.
இன்று ஈழத்தில் இருக்கின்ற அரசியல்வாதிகள் மக்களின் உரிமைக்காக ஒன்றையும் செய்துவிடவில்லை, ஏதோ அரசியல் மற்றும் அதிகார தீர்வுகளை பெற்று தருவோம் என்றெல்லாம் சொன்னார்கள், இன்று அதையும் குறைத்துக் கொண்டார்கள்.
முப்பது ஆண்டுகாலம் ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை போராட்டம் தோற்று, முப்பது ஆண்டுகாலம் ஆயுத போராட்டம் செய்து, தமிழ் ஈழம் என்ற உறுதியேற்று, நீண்ட பயணம் செய்து அதில் இலங்கை மட்டுமல்லாத உலக சூழ்ச்சிகளின் காரணத்தால் தோற்று, இன்று நீதியற்றும் நாதியற்றும் கிடக்கின்ற மக்களை, மீண்டும் தந்தை செல்வா அவர்களின் வட்டுகோட்டை தீர்மானத்திற்கு முன்பான இடத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்து இருக்கிறார்கள் ஈழத்து அரசியல்வாதிகள்.
இன்று தமிழர்களிடம் ஆயுதங்கள் இல்லை, ஆனால் இன்றும் சிங்கள ராணுவம் தமிழர் பகுதிகளை ஆயுத கட்டுப்பாட்டின் கீழ்தான் வைத்துக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் தமிழர்களின் உரிமை கோரும் போராட்டம் முழுக்க முழுக்க அகிம்சையால் கட்டமைக்கப்பட்ட ஜனநாயக ரீதியில்தான் ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டுகொண்டு இருக்கின்றன, இதை யாரும் தீவிரவாதம் என்று கூறிவிட இயலாது.
1957 ஆம் ஆண்டு தமிழர்களுக்கும் மாநில சுயாட்சி அதிகார பகிர்வுகள் சமதர்ம வாழ்வாதாரம், அரசியல் உரிமைகள் போன்றவைகள் வழங்கப்படும் என்று சிறீமாவோ பண்டாரநாயக்கும் தந்தை செல்வநாயகம் அவர்களும் கைசாத்திட்டுக்கொண்ட பாண்டா செல்வா ஒப்பந்தம் வீணாய் போனதும், அதில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டதும் ஒரு வரலாறு உண்டு.
1965 ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று, தமிழர்களுக்கு மாநில ஆட்சி அதிகாரமும், அனைத்து அரசியல் பகிர்வுகளும், சமஉரிமை வாழ்வாதாரமும் அளிக்கப்படும் என்று டட்லி சேனநாயக்கும் தந்தை செல்வா அவர்களும் கைசாத்து இட்டுக்கொண்ட இந்த இரண்டாவது ஒப்பந்தத்திலும் தமிழர்கள் ஏமார்ந்து போன வரலாறும் உண்டு. இது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு சம்பந்தன் அவர்களுக்கு தெரியாமல் இருக்காது.
சிங்கள அரசால் பலமுறை ஏமாற்றப்பட்டு, இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலையில்தான், வட்டுகோட்டை தீர்மானமும் ஆயுத போராட்டமும் தொடங்கியது.
ஏற்கனவே ஏமார்ந்து போன அனுபவம் இருக்கிறது, இன்றும் தொடர்ந்து ஏமார்ந்து கொண்டுதான் இருக்கிறோம், இப்படி இருக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு, இலங்கை அரசிடம் இருந்து என்ன தீர்வை வாங்கித் தர போகிறது என்று எதுவுமே புரியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் அவர்களுக்கு பின்னால் இருக்கிறார்கள், ஆனாலும் அவர்களின் கொள்கைகள் தீர்க்கமானதாகவும், கோசங்கள் அழுத்தமானதாகவும் இருப்பதாக தெரியவில்லை. அவர்களின் நகர்வுகளில் தயக்கநிலை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
இன்று உலகமே ஈழப்பிரச்சனையை பேசுகிறது, இந்த வாய்ப்பை தவறவிடாமல், தமிழ் தேசிய கூட்டமைப்பு, அழுத்தமான கோரிக்கைகளை முன்வைத்து முன்னேற வேண்டியது அவசியமாகும், ஏனென்றால் இந்த தருணத்தை தவறவிட்டுவிட்டால் இனி ஒரு சந்தர்பம் அமையாது.
இது சாதாரணன் சந்தர்ப்பம் அல்ல, உயிர்களையும் உடைமைகளையும், இழந்த பிறகுதான் இந்த சந்தர்பம் கிடைத்து இருக்கிறது, எனவே தீர்மானங்கள் வலுவானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டியதும், அதற்கான நகர்வுகள் மிக துரிதபடுத்தப்பட வேண்டியது என்பதும் மிக அவசியமாகும்.
இலங்கை அரசுக்கு ஏமாற்றுவது என்பது வாடிக்கையான விடயம்தான், ஆகையினால் அவர்களாகவே ஏதாவது செய்வார்கள் என்று நம்பிக்கொண்டு இருப்பதில் எந்த ஒரு நன்மையுமில்லை என்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல, அனைத்து தமிழர்களும் விளங்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு பேரினவாத வன்போக்கில் சிக்கி அல்லல்படும் சிற்றின மக்கள், ஐயோ சாமி எங்களை விட்டுவிடுங்கள் என்று அவர்களின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதுதான் விடுதலை ஆகும் - ஆனால்
அந்த விடுதலையை மறுத்து, அந்த சிற்றினத்தை தங்களின் கட்டுப்பாட்டிற்கும் கீழ வைத்துக் கொள்ளவே ஆளும் அதிகார வர்க்கம், மேலும் மேலும் முயலுகின்றன.
இந்தியாவினால்தான் தங்களுக்கான உரிமையை மீட்டுத்தரமுடியும் என்று தொன்றுதொட்ட காலம் முதலாக ஈழத்தமிழர்கள் எண்ணி வருகிறார்கள், இந்தியாவையே தங்கள் தாயகமாக கருதி அவர்கள் வாழ்கிறார்கள், இறுதி போரில் இந்தியா வந்து காப்பாற்றும் என்று இந்தியாவின் திசைநோக்கிப் பார்த்து அழுது அழுது செத்தார்கள், ஆனாலும் இந்தியா ஈழத்தமிழர்களின் உணர்வுகளை பெரிதாக உணரவில்லை, உணர்ந்து இருந்தால் இறுதிப்போரை தடுத்து நிறுத்தி இருக்கலாம். மாறாக தான் பெற்ற குழந்தைகளை அந்த தாயே கொன்று ஒழிப்பதைபோல், இலங்கை அரசுக்கு போர் நடத்த உதவியாக இருந்தது இந்திய அரசு.
அங்கே நடந்து முடிந்த போர் குற்றங்களை ஆராய்வதற்கு ஒரு சர்வதேச விசாரணை, பொதுவான ஒரு வாக்கெடுப்பு, போன்ற ஒரு உண்மையான ஜனநாயக தீர்வைக்கூட தமிழர்களுக்காக அகிம்சை தேசமான இந்தியா இதுவரை வலியுறுத்தவில்லை. மாறாக ஐ நா விசாரணைக்கு எதிர்மறையாக நின்றது, இல்லையேல் வாய்மூடி மௌனம் காத்தது. இப்படிப்பட்ட இந்தியா இனிமேலும் என்ன தீர்வை தந்துவிடும் தமிழர்களுக்கு என்பதுதான் தெரியவில்லை.
அழும்போது கரம் நீட்டாத அகிம்சை தேசம், இன்று எல்லாம் முடிந்தபிறகு, வீடுகட்டி தருகிறது,
இலங்கைச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தோ, அதற்கான தீர்வு குறித்தோ பெரிதாக எதுவும் அலாவவில்லை, அதோடுமட்டுமல்ல காலம் காலமாக தமிழக மீனர்வர்களுக்கு ஏற்பட்டுகொண்டு இருக்கின்ற துன்பத்தை துடைக்க ஒரு வலுவான கலந்துரையாடலை இலங்கை அரசோடு நிகழ்த்தியதாக தெரியவில்லை. கண்முன்னே அநியாயம் செய்த ஒரு இனப்படுகொலை குற்றவாளியை நட்பு பாராட்டிவிட்டு வந்து இருக்கின்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் இலங்கைப் பயணம் என்னைப்போன்ற தமிழர்களின் எதிர்பார்ப்பிற்கு பெருத்த ஏமாற்றத்தினை மட்டுமே தந்திருக்கின்றது.
தமிழர்கள் மிகவும் தனித்துவமானவர்கள், அதனாலேதான் அவர்கள் அவர்களின் பிரச்சனைகளை அவர்களாகவே தீர்த்துக்கொள்ள வேண்டிய நிலை நீடிக்கிறது. இங்கே நேர்மைக்கும் நீதிக்கும் காலமில்லை. அடுத்தவர்களை நம்பி எதுவும் நடக்கப்போவதாக தோன்றவில்லை. தமிழன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் இன்றைய எதார்த்த நிலையாகும்.
---------------------நன்றிகளுடன், - நிலாசூரியன்.