தொழுதிடுவேன் தமிழ் அன்னையை - கவிதை எண் 800

​காலத்தின் சுழற்சியே வாழ்வின் பரிமாணம்
ஞாலத்தின் மாற்றமே வளர்ச்சியின் அறிகுறி ! ​
என்னிலை அன்றும் இன்றும் ஒன்றேதான்
மழலையே நான் தரணியிலும் தளத்திலும் !

கிறுக்கினேன் கிழித்தேன் தமிழ் கிறுக்கனாய்
முறுக்கிய மீசையுடன் முடங்கியே இருந்தேன் !
எழுந்த உணர்வுகளை எழுதிடவே நினைத்தேன்
எழுத்து தளத்தையே களமாக்கி பதிவிட்டேன் !

அடியேன் இன்றும் ஆரம்ப பள்ளிநிலையே
அடித்தளத்தில் இருந்தாலும் ஆதரவு கூடியது
எழுத்தில் உள்ளவர்கள் உறவுகளாய் ஆயினர்
ஏணிப்படி ஆனது என்போன்றோர்க்கு தளமும் !

கவிஞர்கள் உலகமோ கடலைப் போன்று
கவிதைகள் அதிலே அலைகளே என்றும் !
கரையைத் தொடுவதும் கடப்பதும் உண்டு
கண்ணில் தெரிவதும் மறைவதும் உண்டு !

சிறுவனே நான் சிறுமுத்தம் இடுகிறேன்
தொட்ட அலையின் நனைந்த மண்ணை !
கடல்நீர் பட்டதால் நெஞ்சமும் நனைந்தது
கவிஞர்கள் பாதம் வணங்கியதாய் ஆனது !

எண்ணிகை எண்ணூறு இன்று இப்பதிவு
என்னுள் கலந்தது எழுத்தும் தளமும் !
கருத்தளித்த கரங்களுக்கு எனது நன்றி
வாழ்த்திய இதயங்களுக்கு எனது நன்றி !

தொடர்வேன் நானும் படர்வேன் நெஞ்சிலும்
எழுதிடுவேன் என்றும் புவியில் உள்ளவரை !
தழுவிடுவேன் தமிழ் மொழியால் எவரையும்
தொழுதிடுவேன் என்றும் தமிழ் அன்னையை !

( இக்கவிதை நான் எழுத்து தளத்தில் பதிவிடும்
800 வது படைப்பு )

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Mar-15, 9:42 am)
பார்வை : 151

மேலே