நிலா கண்ணு வச்சிடுச்சி

தாத்தாவும் அப்பாவும்
கயிறு கட்டில
என்னை கொஞ்சிப்பேசியே
நண்பர்கள் ஆனார்களாம்

மருமகனுக்கு மாமனாரும்
மாமனாருக்கு மருமகனும்
சுருட்டு கொடுத்து
பீடியை கைமாத்தினாங்களாம்.

சின்னஞ்சிறுசா நானிருக்க
ஆயாவின் இடுப்பில
ஒய்யாராமாய் குந்திக்கொள்ளும்
அழகை பார்த்தப்படியே

அம்மா சொல்வாளாம்
எம் மவமேல
அந்த நிலா கண்ணு பட்டிருச்சி
சுத்திப்போடுன்னு.

சித்தியும் மாமனும் ஒன்னுசேர்ந்து
வேப்பிலையும் கரித்துண்டும்
உப்பும் இரும்பும்
சேர்த்து வச்சி
நிலாவை பார்த்துக்கிட்டே
எனக்கு சுத்திப்போட்டாங்களாம்..

இப்போ நான் பட்டிணத்தில.

அந்த நிலா
இன்னும் கூட எம்மேல
கண்ணு வைக்குது.


சுத்திசுத்தி தேடுறேன்
சுத்திப்போட நாதியில்ல

எழுதியவர் : அமுதினி (16-Mar-15, 6:24 pm)
பார்வை : 179

மேலே