திருடன்

அவன் தொழில்
திருட்டு !
அவன் பிடிப்பது
சுருட்டு !
அவன் மனமெங்கும்
ஒரே
இருட்டு !

மாதக்கடைசியில்
அவனுக்கும் வரும்
பஞ்சம் !
முதல் தேதியென்றால்
மல்லிகைப்பூவிலிருக்கும்
மஞ்சம் !
காசில்லாத போது
காவல் நிலையம்தான்
அவனுக்குத்
தஞ்சம் !

அடர்த்தியானது
அவன்
புருவம் !
அழுக்கானது
அவன்
உருவம் !

அவன்,
மாலையானதும்
மதுவை உள்ளே
ஊற்றி விடுவான் !
வெளியில் வந்தால்
ஒரு நூறையாவது
தேற்றிவிடுவான் !
தன் இருப்பிடத்தை
அடிக்கடி அவன்
மாற்றிவிடுவான் !

அனாதைதான்
அவன்
ஆதியிலிருந்து !
ஒட்டிக்கொண்டது
இத்தொழில்
பாதியிலிருந்து !

அவனது
பரிதாபத்தோற்றம்
பிறர் உள்ளத்தை
வருடிவிடும் !
சுவடு தெரியாமல்
அவன் கை
திருடிவிடும் !

ஒருநாள்
அவனுக்கு ...........

மதுவருந்தாமல்
நாக்கு
கரித்தது !
காசில்லாமல்
கை
அரித்தது !

ஒரு
பொதுவிடத்தில்
மக்கள் சிலர்
கூடியிருந்தனர் !
திறக்காத
உதட்டால்
தம் உள்ளத்தை
மூடியிருந்தனர் !

அவ்விடத்தை
இவன்
அடைந்தான் !
பலரையும்
பார்வையால்
கடைந்தான் !

ஒரு
வயதானவன்
பையொன்றை
வைத்திருந்தான்
கக்கத்தில் !
போய்
நின்றுகொண்டான்
இவன்
அவன்
பக்கத்தில் !

கெட்டியாகப்
பிடித்திருந்தான்
கிழவன்
பணத்தை !
உணர்ந்து கொண்டான்
திருடன்
அதன்
மணத்தை !

காத்துக்கொண்டிருந்தான்
இவன் !
பேருந்தை
எதிர் பார்த்துக்கொண்டிருந்தான்
அவன் !

ஒரே ஒருநொடி,
கிழவன்
சற்று
அசந்தான் !
மறுநொடியே
பை ஆனது
திருடன்
வசந்தான் !

அதிர்ச்சியில்
கிழவன்
தன்னிலை
மறந்து விட்டான் !
பறிகொடுத்த
தவிப்பில்
பாதி
இறந்து விட்டான் !
பிடுங்கியவனோ
பையோடு
பறந்து விட்டான் !

சூழல்
தீப்பற்றிக்கொண்டது
கபகபவென்று !
ஓடினர்
திருடன் பின்னால்
சிலர்
தபதபவென்று !

வெறிகொண்டு ஓடினான்
திருடன் !

அந்தப்பை
திருடன்
கையைச்
சுட்டது !
கிழவனின்
வறியதோற்றம்
ஏனோ மனதைத்
தொட்டது !
பிடித்திருந்த
ஆசைப்பேய்
உடனே அவனை
விட்டது !

யாருக்குத்தெரியும் !

மருந்தாகலாம்
அந்தப்பணம் !

புத்தகமாகலாம்
அந்தப்பணம் !

தாலியாகலாம்
அந்தப்பணம் !

கடன் அடைக்கலாம்
அந்தப்பணம் !

வீடு திருப்பலாம்
அந்தப்பணம் !

இருப்பவனை
விடக்கூடாது !
இல்லாதவனைத்
தொடக்கூடாது !

பாடிக்காட் முனீஸ்வரா..................
சுரண்டமாட்டேன்
இல்லாதவனின்
உப்பை !
செய்யமாட்டேன்
இனி
இந்தத்
தப்பை !

ஓடிய திருடன்
கீழே விழுந்தான்
இல்லாத கல்லொன்று
செயற்கையாகத்
தடுக்கி !
பையை
நழுவ விட்டான்
பின் வந்தவர்களைத்
தன்முதுகின் மீது
அடுக்கி !

ஒலித்தது
இடி !
விழுந்தது
அடி !

ஒப்படைத்தது
கூட்டம்.....................
கிழவனிடம்
பையை !
காவலனிடம்
திருடனின்
கையை !

வழிந்தது
திருடனின்
கண்ணில்
கண்ணீர் !
அது,
அவனது
மனமெனும் கிணற்றின்
அடி ஆழத்திலிருந்த
கையளவு
தண்ணீர் !


பின்குறிப்பு : விஷாலுக்கும் இந்தக் கவிதைக்கும் சம்பந்தமில்லை !

எழுதியவர் : ( பழைய ) குருச்சந்திரன் (17-Mar-15, 6:32 am)
Tanglish : thirudan
பார்வை : 580

மேலே