நட்பு=காதல்=அன்பு ====தொடர் ==பகுதி 8
8
################### 8 ########################
கல்லறைகள் பேசா
என் கல்லறை மட்டும்
பேசிக்கொண்டே இருக்கும்-
உன் நினைவுகள் சுமப்பதால்...
******** நன்றி : தாஸ் (18.09.2012.)
###########################################
நீயும் நானும்
பேசிய கணங்களின்
வீச்சுகள்
காற்றில் கலந்து மிதந்து
எங்கெங்கோ சென்றதே…
மீண்டும்
உன்னிடம் வந்து
என் நலம் விசாரித்தால்
நான் இன்றைய உன் பகைவன்
என்பாயா?
அன்றி நேற்றைய நண்பன் என்பாயா?
யோசி!
நேற்று என்பதெல்லாம்
இன்றுதான் உனக்கு!
உனது வாழ்க்கைத் தடத்தில்
பலருக்கு இந்நிலைதான்
நான் என்ன விதிவிலக்கு!?
நட்பின் உயிர் எழுத்து மறைக்கும் நீ
இனியாவது,
உன் வாழ்க்கை ஏட்டினை
மெய் எழுத்துக்களால் நிரப்பு!
அன்றைய பொழுதுகளில்
நம் செயல் குருவிகள்
எத்தனை சாதனைக் கூடுகளைக் கட்டின
உன் வீட்டு விழாக்களில்
எச்சில் இலைகளையும் நான் எடுக்க
உன் புன்னகையைத் தூவி
வருவோரை வசீகரித்துக் கொண்டிருந்தாய்!
நம் எழுத்துப் பின்னல்களில்
எத்தனை கவிதைகள் பிறந்தன
வெளியீட்டு விழாவின்
“ஹலோ ஹலோ மைக் டெஸ்டிங்” நான்,
பொன்னாடை பொதிக்குள் நீ!
நமது கைவிரல் ஸ்பரிசம் பட்டு
எத்தனை “நினைவுமலர்கள்” பூத்தன
நினைவில்லையா….?
இனி நான் விசாரிக்கப்படும் போது
இருந்தார் என்பாயா?
இறந்தான் என்பாயா?
யுகங்கள் நொடிகளாக்கியது
நம் நட்பு
நொடிகளை யுகங்களாக்கியது
உன் துரோகம்
நட்பு பிரியும் கூடுவதற்கு!
பகையானால்…?
பகையின் புகை மூட்டத்தில் பொசுங்குவது எல்லாமும்தான்
எவர் அனுமதியும் இன்றி
அவர் ஆத்மாவில் கூடு கட்டும்
ஊர்க்குருவி நீ!
கட்டிய கூட்டுக்குள்
குஞ்சுகளோடு தாயை
மோதவிடும் மோடிமஸ்தான் நீ!
கட்டிய கூட்டிற்குள் என்றில்லாமல்
கூட்டின் மரத்திலும்
மரத்தின் வேர் நுனிக்கும்
உன் ஆட்சியைப் பரப்பி
ஆளுமை செய்திட
‘எதையும்’ செய்பவன் நீ......!!
தகுதி வரும் முன்பே
அதிகார நாற்காலியில் நீ
அதற்காக ஆயுட்கால வேடங்கள்
எத்தனை புனைந்தாய்?
இதற்கு அனுமதித்தோர் உன் அன்புக்குள்
எதிர்த்தோர் உன் அம்புக்குள்!
அன்பாலும் அம்பாலும் வீழ்த்தும்
உனக்கு
இன்றைய நட்பு, நேற்றைய பகை
நேற்றைய பகை, நியாயப்படுத்தப்படும்
நாளைய நட்பு!
வணிக வியாபாரி தோற்கும்
வசீகரக் கணக்குப் புலி நீ!
பந்திக்கும் படையலுக்கும்
நீர் தெளிக்க நான்
முதல் இலையாய்,
படையலாய் நீ!
எப்போதும்,
எப்படி இந்த
சங்கிலித் தொடரில்
நீர் தெளிப்பான்களை
மாற்றி மாற்றி
இலைகளைப் புணர்கிறாய் நீ
சே,
உமிழலாம் உன் மீது!
இயலாது
ஒரு காலத்தில்
உனது பெயர் உச்சரித்த…
நாக்கின் நனைவு அதில்தானே!
“தாடியின் ரகசியம்தான் என்ன?”
நாடிக் கேட்டது உன் வினா
“நினைத்தே வாழ
வளருமாம் முடி தாடி”
விடையாய் முளைத்தது இது!
விளக்கமாகிப் போனது
உன் பிரிவில் ....
“ஒன்றை மறந்தே
வாழ (வாட?) தாடி உதிரும்”
சுயநலவாதிகள் சூழ்ச்சி வலையின்
கறுப்பு நட்பை மறந்தும்
சிவப்புச் சிந்தனை நினைத்தும்
இனி நான்
வாழ(ட) வேண்டிவரும்!
இன்னும் தேடுவோம்