நட்பு =காதல் = அன்பு ===தொடர் ==பகுதி 10நிறைவு
######10 #######
#############################################
கற்றுக்கொள்ளாத ....
கற்றுக்கொடுக்காத பாடமாய்
என் அன்பு
நன்றி: கலாநெஞ்சன் ஷாஜஹான் (16 .08 .2012 )
#############################################
கூண்டுக்குள் கிளிகளை
அடிமைகளாய் அடைத்திருந்தேன் என்று
கிளிகளுக்கு வேதம் ஓதிய
சாத்தான் நீ!
சில ஆண்டுகளாகும் ,
கிளிகளுக்கு இறக்கை முளைத்திட
பூனைகளிடம் இருந்து தப்பித்திட!
கூண்டுக்குள் இருந்த அதன்
ஆன்ம சுவரெல்லாம்
உவகை ஓவியங்கள்
முழு நேர
விடுதலை உணர்வுகள்
அளித்தவன் நான்!
கிளிகள் அறியும்!
சமதர்ம தோழமை அளிப்பவன்
எவரென்று...!
நீ அறியமாட்டாய்!
என் கைத்தடவல்களில்
செழித்த மலர்க் கொத்தை
எனக்கே மலர் வளையம் ஆக்கிய
உன் துரோகம் ஒரு நாள் வெளி வரும்
அப்போது நீ என்ன செய்வாய்?
நம் பிரிவில்
என் அடையாளத்தை
எனக்கே அந்நியப்படுத்திய
உன் அயோக்கியத்தனம்
ஒரு நாள் நியாய வீதிக்கு வரும்!
கல்லடியில் கதறும் உன்
துரோகக் காயங்களுக்கு இப்போதே
மருந்தைத் தயார் செய்!
உனது துரோகத்தினை நான்
திருப்பியளித்திட இயலாதா?
பொதுயுடமைப் பாத்திகளின்
புனித வேரடி நீர் என் ரத்தத்துகளில்... !!
அன்றியும்,
நமது கடந்த காலங்களின்
மணித்துளிகள் முணுமுணுத்து
அமிலத் தூறலாய் நினைவழிக்க
நான் விரும்பவில்லை!
நினைவுகளாவது நிற்கட்டும்.
ஏன் எனில்
நினைவுகள் நன்கறியும்
உன்னையும் என்னையும்!
கோடிக் குற்றங்களை உன் மீது
அந்த நினைவுகள் சுமத்தும்போது
என்ன செய்வாய் நீ?!
என் நினைவுகளின் நெரிசலில்
உன் ஆன்மா பிய்க்கப்படுமே
என்ன செய்வாய் நீ?!
காலம் ஒரு துப்புரவாளன்
எதையும் அப்புறப்படுத்தும்.
காலம் ,
புதிர்களை அவிழ்க்கும்
பிரபஞ்ச விரல்கள்!!
எதிர்காலம் நிர்ணயிக்கும்
காரிய உரல் !!
காத்திருப்பு பிடிக்காத
காதலன்...
ஒத்திவைப்பே இல்லாத
உய(யி)ர் நாடாளுமன்றம்..!!!
ஆனால் என் காதில்
காலம் சொல்லியது
“துரோகப் புழுதியை நான்
துடைப்பம் எடுத்துத் தள்ளுவது இல்லை
நானே ஊழியாய்ப்
பழிதுடைப்பேன்!
ஏன் எனில்
ஒருவன் துரோகப் புழுதிக்குள்
மற்றவனின் நட்பு வரைந்த
ரங்கோலி வடிவங்கள் இருக்கும்.
நான் எப்போதும் ரங்கோலி
விரும்புவேன்”
காலம் சென்றது கம்பீரமாய்!
உன்னுடன் நான் இருந்த
எனது காலம்
முக்காலத்தையும் தற்காலமாக்கியது!
பிரிந்த காலம் கற்காலமாகியது!
எனவேதான் பிரிவில்
தாக்குதல்களா?
குரலாய் நீ, ஆணவமாய் நீ,
குமுறலாய் நான்,
ஆவேசமாய் நாம்!
அழிந்து வீழ்ந்தது தரையெங்கும்
நட்பின் இதழ்கள்!
அழிந்தது நம் நட்பு மட்டும் அல்ல,
பல ஆண்டுகால கூட்டுக்குடும்பத்தின்
பாசவலை நரம்புகளும்தான்!
அன்றியும்
தோள் கொடுக்க வந்ததன
பொதுயுடைமை பூங்கொத்துக்கள்..
எனக்கு..!!
இனிவரும் காலம் உனக்குப்
பொற்காலமாகட்டும்
செம்பு நீ என அறியாமல்
தங்கத் துண்டுகள் பல உள்ளன!
நகைகளாக்கு உனது தோள்களுக்கு!
உன் உமி கலந்த
ஊர் அரிசியில்
உணவு பொறுக்கும்
பொற்காலம் இனி உனது!
உனக்கு நினைவில் உள்ளதா?
உன் கண்பட்ட இடத்தில்
நீ ஓவியம் வரைய
என் காரியத்தைத்
தூரிகையாக்கி அளித்தவன் நான்!
-----சமதர்ம காட்சிகள்
நீ உருவாக்குவாய் எனும்
என் நம்பிக்கை அழிந்ததே……..
உன் விரல்பட்ட இடத்தில்
பூப் பறிக்க
என் கரங்களைக் கருவியாக்கி
அளித்தவன் நான்
----செஞ்சுடர் மாலை தொடுப்பாய்
எனும் என் நம்பிக்கை அழிந்ததே…..
தோழமை வயலில் எத்தனையோ
மலர்க்கொடிகள்
வேர் இருந்தும் வெளிநிலம் காணாமல்
பொசுங்கிப் போனதுண்டு.
ஆனால் பீனிக்ஸ் போல்
வெளி வரும் ஒரு நாள்..
அண்டத்திலும் உலாவந்து
சூரிய ரேகை மறைத்த
உன் புகழின்
பரிணாம வளர்ச்சுக்கு
வேர் முடிச்சுகளாய்
வேராய் எத்தனையோ பேர்
வேறு யாரறிவார்?
நான் அறிவேன்!
பலரோடு வாழ நினைப்பது
இயற்கை.
பிறர் அழிவில் தான் வாழ்வது
துரோகம்.
புரிய வைத்தாய் பிரிவில்
நீ எனக்கு!
இதுதான் சரித்திர வேதனை!
இந்த என் கவிதை வரிகளைத்
திருப்பி நீ அனுப்புவாய்
நான் அறிவேன் !
அதனால் தான்
என் சொற்களில் நினைவு மையால்
எழுத்துக்கனை அளித்துள்ளேன்
திரும்பி வந்ததாலும் அழியாது
தமிழ்போல் நிலைத்துச்
சிரித்து இருக்கும்!
மானுட குருதி போல்
நிறமேற்று இருக்கும்….
எனது நினைவுகளை
ஒரு வேளை நீ
உன் வீட்டு ஜன்னல் வழி
கிழித்து எறிந்திருக்கலாம்!
பறந்து சென்ற அவை,
உன் இன்றைய நண்பர்கள் மடியில்
“இன்று நான்
நாளை அவர்களும்”
என்று நீ புரிய வைக்கும் காலத்தில்
அவர்களின் நன்றித் தென்றல்
என் மீது பட்டு
உன்னையும் தழுவும்போது
தென்றல் ஏற்பாயா… ?
எரிப்பாயா…?
என்ன செய்வாய்…
யோசி!
அன்றியும் நீ இன்னமும்
என் தோழனே.-
---தோழன் , ஒரு புனித சொல்
உனக்காக புனிதம்
இழக்க முடியுமா என்னால்???
#########################################…..
தொடர் முடிக்கிறேன் –
இன்னும் பலர் தேடும்
வாய்ப்பு அளித்து..
இடர் பல பொறுத்தோர்
நன்றிக்குரியோர்….
சுடர் இது ; சுனாமியாய் வந்தது;
என்றோர் வாழ்த்துகளுக்குரியோர்…..
படர் முல்லை பரவ
கொம்பு வேண்டுவது போல்
அன்பு எங்கும் நிலவ
தோழமை மட்டும் போதும்.
அளிப்பீர்…காப்பீர்…!!
சிந்தித்தோருக்கு
சிரம் தாழ்ந்த வணக்கம்…
நிந்தித்தோருக்கும் நிறைய
வணக்கங்கள்….
அன்புடன் அகன்