இயற்கையைப்போல் இம்சிக்காதே என்னையும்

கடற்கரையில்...உன்
கால்தடம் பதிக்காதே
களவாட தினம் தினம்
கரைதேடி வரக்கூடும்
அலைகள் ...

புல்வெளியில்...உன்
பாதம் பதிக்காதே
படரும் பாதம் தாங்க
படு போட்டியிடக்கூடும்
இலைகள் ...

வனங்களிடத்தில்...உன்
வனப்பு காட்டாதே
வளைவுகள் கண்டு
வருத்தம் கொள்ளக்கூடும்
மலைகள் ...

இயற்கையிடத்தில்...உன்
இதயம் காட்டாதே
இளமென்மை கண்டு
இன்னல் படக்கூடும்
மலர்கள் ...

நதிகளிடத்தில் ...உன்
நடைகாட்டாதே
நனைந்த உனைக்கண்டு
நாணம் கொள்ளக்கூடும்
மீன்கள்...

இசைபாட ...உன்
இதழ் விரிக்காதே
இதயத்தின் கீதமதை
இனி இழக்கக்கூடும்
குயில்கள் ...

கொஞ்சும் ...உன்
மொழிகள் பேசாதே
கொஞ்சம் கொஞ்சமாய்
கொள்ளையிடக்கூடும்
கிளிகள் ...

கலைந்த ...உன்
கருங்கூந்தல் காட்டாதே
கார்மேக கூட்டமென
கரம்கோர்த்து ஆடக்கூடும்
மயில்கள் ...

மறந்தும் ...உன்
மலர்விழி காட்டாதே
மருளும் விழிகண்டு
மயங்கி விழக்கூடும்
மான்கள் ...

இரவு பகலுக்கு ...உன்
இயக்கம் காட்டாதே
இனிய மயக்கத்தில்
இயக்கம் மாறக்கூடும்
அவைகள் ...

இயற்கையைப் போல்
இவ்வாறென்னையும்
இம்சிக்காதே ....
இதயம் மறந்திடக்கூடும்
'' லப் ..டப் '' ஒலிகள் ...!
---------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (18-Mar-15, 12:48 am)
பார்வை : 255

மேலே