எனக்காக
உனக்குத்தெரியுமா.......?
கிளிஞ்சல்கள் சேகரிக்கும்
சிறு நாழிகைப் பொழுதிலும்
கரை தொடும்
அலைகளின்
ஒவ்வொரு துளி நீரும்
என் வியர்வைகளென.......
அவைகளென்
கண்ணீர்த் துளிகளென்ற
உண்மையை சொல்லி
உன்னிடம் இரக்கம்
யாசிப்பவளல்ல நான்
எதிர்வரும் காலங்களில்
கிளிஞ்சல்களையல்ல
முத்துக்களை சேகரிக்க
மூச்சடக்கி பயிற்சியெடுக்கிறேன்..........
என் நெஞ்சிற்குள்
எரியும் நெருப்பின்
செஞ்சூட்டுத் தணலில்
சோளக்கதிர்களை வாட்டி
பசியாற்றிக் கொள்வோர்களின்
மத்தியில்
அத்தீயை எனது எழுதுகோலுக்கு
தங்கமுனை செய்ய
ஊதிப் பெரிதாக்குகிறேன்....
சாகப் பிறந்தேன் என்பது
நிஜம்தான் என்றாலும்
சாவிற்கும் வாழ்விற்குமிடையிலுள்ள
நாட்கள் சாதிக்கப்
பிறந்தவைகளே....
என் எழுதுகோலுக்கும்
காகிதத்திற்குமிடையில்
சிக்கித் தவிக்கின்றன
எழுத்துருவங்கள்............
சாராசரி எடைக்கல்லில்
நிறுத்தப் படாமல்
தராசுத் தட்டுகளின்
முள் நுனியில்
கூரிய முனையாய்
நிலை நிறுத்திக்கொள்வேன்
என் வாழ்வை
எனக்காக..........
...........சஹானா தாஸ்