கொடிக் கம்பம்

இந்த பச்சைப் பூங்கொடி
தாவியேறிப் படர்ந்திட
வீதியின் ஓரத்தில்
அழிந்துபோன ஒரு
கட்சிக்கொடிக் கம்பமாய்
ரெண்டு தலைமுறைக்கு
முன்னமே என்னை
நட்டுச் சென்றவன்
யார்..?
வீதியின் ஓரத்தில் நின்றே
காண்கிறேன் ..
வீணில் அலைந்து கெட்டு
விசனங்கள் ..
உயிரின் வாசல் வரை..
சுமந்து..
வீதி முனையில் வந்து
என் முன்னே தலை திருப்பி
மீளா பயணம் செல்லும்
மிகப் பலரும் போவதையே..
நான்..!
சஞ்சலம் தாங்கி சிலர்..
சிந்தனை யோடு சிலர்..
பழி வாங்கிடவும்..
பழி போட்டிடவும்..
என் முன்னே
என்றும் சிலர்..
பந்தலிட்டபோது கட்சிக்கூட்டம் ..என் அருகில்
இல்லாவிட்டால் மொட்டைக் கம்பம் ..
என் பேரது ..!
துருப்பிடித்த இதயங்களின்
முழுப் பரிமாணங்களை
முக்கூட்டில்
நின்றபடி வேடிக்கைப்
பார்த்திருக்கும்
என்னை ஏன் இன்னும்
துருப் பிடிக்கவில்லை..?
எதற்கேனும் உதவியாய்
என்னால் ..
இருக்க முடிவதாலா..?