தன்னோவியம்- Mano Red

கிழிந்து போன
நாட்காட்டியின் ஓரத்தில்
தொங்குகிறது,
கடந்து போன
கடந்த காலத்தின்
கையாலாகாத நாட்கள்..!!

கைம்பெண்ணின்
கண்முன் வைக்கப்பட்ட
கண்ணாடி,
பொட்டின்றி பூவின்றி
அலங்கோலமாய் இருப்பதை
ஒத்திருந்தது,
ஓரம் கட்டப்பட்ட நிஜங்கள்..!!

தொலைநோக்கு பார்வையெல்லாம்
தொலை தூரம் செல்ல,
ஏமாற்றத்தின்
பதங்கமாதலில் பிறந்த
வியர்வைத் துளி
வேடிக்கை மட்டுமே பார்க்கிறது..!!

வடுக்கள் மிகுந்த
வாழ்வு களத்தில்
துப்பவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
ஒளிர்ந்து அழுகும்
மெழுகுவர்த்திக்கு
ஒத்தடம் கொடுத்து என்ன பயன்..?

பசுமை நினைவுகளை
மோட்டுவளை பார்த்து
ரசிப்பவனுக்கு தெரியும்,
மாறுதல் தத்துவத்திற்கு
எப்போதும்
எதிராளியாய்
நேர் நிற்பது
இந்த ஏமாற்ற அறிகுறி..!!

இப்படி எந்த முகம் வைத்து
ஓவிய முகம் வரைவது..?
தன்னோவியம் வரைய
எத்தனிக்கும் போதெல்லாம்,
பித்துப் பிடித்த நிலையை
கோணல் மனம்
தானாகவே சென்றடைகிறது..!!

எழுதியவர் : மனோ ரெட் (20-Mar-15, 10:17 am)
பார்வை : 77

மேலே