மூடநம்பிக்கையின் சீடர்கள்

தலையில் தேங்காய் உடைத்தால்
தலைவிதி மாறும் என
தவம் கிடக்கும்
தன்னறிவில்லா
மதிமழுங்கிய மூடர்கள்......!

காற்றடைத்த பைக்குள்
காத்து கருப்பு புகுந்ததென
மண்டியிட்டு......!
சாட்டை அடிவாங்கும்
சாபக் கேடுகள்......!

ராகுகாலம், எமகண்டம்
ராசிபலன் என
ராப்பகலாய் பார்த்து.....!
காலத்தை கோட்டைவிடும்
கோமாளிகள்.....!

சூனியம் வைத்து
சூழலையும் மாற்றுவோமென
சூளுரைக்கும் சூழ்ச்சிக்கு
காசை கரைத்திடும்
அறிவு சுழியங்கள்......!

கண்டத்தில் உணவின்றி
தவிக்கும் பாலகர்களுக்கு
பாலை கண்ணில் காட்டாமல்......!
கல்லாய் கிடக்கும்
பிள்ளையார் குடிக்கிறார்
என பாலை கொட்டும்
கொடுமைகள்......!

தாய் தந்தை சுமையென
முதியோர் சுமைதாங்கியில் முடக்கி......!
மோட்சத்திற்காக யாத்திரை சென்று
தீட்சம் பெற்றோமென
தம்பட்டம் அடித்திடும்
தறிகெட்ட மனிதர்கள்.......!

ஒரு முழு பூசனிக்காய்
ஒரு விவசாயின்
தொண்ணூறு நாள் உழைப்பு.....!
வாகனத்தில் வழுக்கி விழுந்தால்
வாழ்நாளெல்லாம் சோதனை
என தெரிந்தும்.......!
முழு பூசணிக்காயை
முச்சந்தியில்
போட்டுடைக்கும்
ஞானக் குருடர்கள்......!

உனக்கு நல்ல காலம்
எப்பொழுது என
கிளி ஜோசியம் சொன்னவனுக்கு
ருபாய் நோட்டும்......!
சீட்டெடுத்த கிளிக்கு
சிறு நெல்லும்
கைமேல் கிடைத்திட....!
ஆனால் உனக்கு....!

கும்பமேளாவில் கூட்ட நெரிசலில்
உயிரை தொலைத்த குடும்பங்களுக்கு
கும்பமேளாவா
மூணுவேளை கஞ்சி காச்சுகிறது?

குடும்பத்தை நடுத்தெருவில் கிடத்தி......!
மடாலயத்துக்குள் புகுந்து
போலித்துறவியின் கேளிக்கை
கூடாரதுக்குள் கும்மியடித்து
சீரழிந்த மூட சாத்தான்கள்.....!

ராசிபலன் பார்த்து வீசுகிறதா
தென்றல் காற்று?

நாள், நட்சத்திரம் பார்த்து
பொழிந்ததா அடை மழை?

விதைத்த நல் வித்துக்கள்
நல்லநாள் பார்த்து முளைத்ததா?

தேனிக்களும் குருவிகளும்
வாசம் செய்ய, கூடுகட்ட
வாஸ்து பார்த்தனவா?

பஞ்சபூதங்கள் பூமியில்
பஞ்சாங்கத்தை பார்த்தா
தன் பங்களிப்பை தந்தது?

மூடநம்பிக்கையின் மேல் சவாரி செய்து
மூடர்கூடத்தில் குடிகொண்ட மனிதர்களே.....!
இன்று உலக தண்ணீர் தினம்
தண்ணீரை சேமித்து, பாதுகாத்து
இயற்கையின் மேல் நம்பிக்கை வைத்து.....!
உங்கள் வாழ்க்கை தொடரட்டும்.
வாழ்த்துக்கள்.

எழுதியவர் : பெ.கோகுலபாலன் (22-Mar-15, 8:10 am)
பார்வை : 881

மேலே