தேநீர் கடை The Tea Shop

மீடியம் நாலு போடுப்பா..
ரெண்டு ஸ்ட்ராங், ஒரு லைட்...
அரை சர்க்கரையா நுரையோட ஒன்னு.. - இப்படி
கல் உடைக்கும் தொழிலாளி முதல் -
கணிப்பொறி கட்டுமானர் வரை - ஒவ்வோர்
வாடிக்கையாளனின்
புத்துணர்ச்சிக்கும் -
புகுந்த வீடாய் இருக்கும் -
தெருவோர
தேநீர் கடைகளுக்குள் உண்டு -
1000 சொல்லப்படாத கதைகள் ---

விளையாட்டாய்
வீடு விட்டு ஓடி வந்து - பின்
விதிப்பயன் இங்கு தள்ளி விட -
எப்போது மாஸ்டர் ஆவோம்? - என்ற
ஏக்கத்தோடு
எச்சில் கிளாஸ் கழுவும் சிறுவனின்
கண்ணீர் - அவன்
கழுவும் நீரோடே கரைந்தோடுகிறது. - பாவம்
அவனுக்கு தெரியவில்லை,

எத்தனை டீ கேட்டாலும்
எந்த வகை டீ கேட்டாலும் - அசராமல்
கலந்து தரும் மாஸ்டருக்கும் உண்டு -
கல்லாப்பெட்டி முதலாளி ஆகும்
கனவுகள் என்று!!

இவ்விரண்டும் கடந்து வந்தும் -
சர்க்கரை, பால், இதர செலவுகளோடு
கடை போடஅடகு வைத்த
மனைவியின் தாலியும் -
கடைக்காக உழைப்பவனின்
அன்றாடக் கூலியும் - தன்
சிந்தனையில் நின்றாலும்
சிரிப்பை மட்டுமே - முகத்தில்
அப்பிக்கொள்ளும்
அப்பாவி முதலாளி.....

வெறும் ஐந்து ரூபாய்க்கு
அலுப்பு போக்கும் - இந்த
தேயிலை தூதர்களின்
விசித்திரம் யாதெனில் -
விடியலுக்கு முன்பே விழித்து -
விடிய விடிய உழைத்திடுமிவர்கள்-
வாழ்வு மட்டும் - என்றும்
விடிவதேயில்லை!!!!!

எழுதியவர் : அரவிந்த்.p (23-Mar-15, 12:34 am)
பார்வை : 927

மேலே