பொழுது சாய்வதில்லை புதுக்கவிதை

பொழுது சாய்வதில்லை…!!
*
பகல்பொழுது முடிந்து விட்டது
அன்றைய பொழுது போதாமலேயே
சூரியன் சாய்ந்து விட்டான்.
மேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,
இரவு துவங்கி விட்டது
மெலிந்து தெரிகிறாள் பிறைநிலா
கொட்டிக்கிடைகின்றன விண்மீன்கள்.
படபடப்பும் பதட்டமுமாய் எங்கோ
நினைவுகள் சிறகடித்துப் பறக்க
கனவுகள் கற்பனைகளில்
வீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,
நுகர்வோரைக் கவர்ந்திழுக்கிறது
கடைவீதிகளில் விளம்பர வெளிச்சம்
உள்ளே வியாபாரம் உச்சம்
கோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்
காதில் கேட்காமல் கூட,
உட்கார்ந்துப் பிரச்சினைகள்
பேசுபவர்களைப் பார்த்துப் பார்த்துப்
பழகிப் போய்விட்டன கல்தூண்கள்.
இருட்டில் சரியாகத் தெரியவில்லை
குளத்து மீன்கள்.
அருகிலிலிருந்தப் பூங்காவிற்கு
குழந்தைகளின் தொல்லைப் பொறுக்காமல்
அழைத்து வந்தப் பெற்பெற்றேர்கள்
சிரிப்பில்லாமல் எதையோ நினைந்து
சலிப்போடு உர்ரென்று முகபாவனை.
புறப்படுவற்கான ஆயத்தம்
அம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.
சில்லென்றிருந்தப் புல்தரை
வெப்பம் வெளிப்படுத்தியது எழுந்தபோது,
காற்றின்றி அசையாமலிருந்தது
அமைதியாகப் பூச்செடிகள்
பொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.
ஆயுளில் ஒருநாள் கழிந்தது
ஒவ்வொரு நாளும் கழிந்துக்
கழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.
நேரமில்லையே என்று
மனிதன் கவலைப்படுகிறான்
சூரியன் நேரம் போதவில்லை
புலம்புவதில்லையென்றும்…!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (25-Mar-15, 10:23 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 60

மேலே