மரணம் நமக்கில்லை

பயணம் முழுக்க
பாரம் சுமந்தவளே
மரணத்தும் என்னை
மடிசுமந்தே புறப்பட்டாய்

உன் மார்புதைத்த
என் காது மடலில்
கரைந்து முடிந்தது
உன்
இதயத்துடிப்பின்
கடைசி நாதம்

மங்கும் நினைவுகளின்
கடைசிப் பதிவுகளாய்
கலந்தே உறைந்தது
என் தலை கோதிய
உன் வளைக்கரத்தின்
கடைசி ஸ்பரிஷம்

சிதிலத்தில் புதையுண்ட
முகம்தேடி முகம்தேடி
குருதி வழிந்து
உறைந்து போனது
கண்கள்

உன் மரணத்தின் வலி
நான் அறியாமலும்
எனது மரணத்தின் வலி
நீ அறியாமலும்
யார் முதலென்று
முடியாத வாதத்தை
சேர்த்தே முடித்து வைத்தது
காலம்

இத்தனை இறுக்கத்தில்
இதுவரை நாம் இருந்ததில்லை
வெறும்
உடல் பிரிதல் மரணமென்றால்
இது மரணம் கடந்த நிலை

நம்மை நாம் பிரிதல்
மரணமென்றால்
நமக்கென்றும் மரணமில்லை

எழுதியவர் : பிரணவன் A .C (28-Mar-15, 9:34 pm)
Tanglish : maranam namakillai
பார்வை : 120

மேலே