இங்கேதான் முடியும்- கருணா

வாழ்க்கையின் வாசற்கதவுகளை
ஓயாமல் முட்டிமோதித் திறக்க
திணறுகின்ற தலைமுறையை
சிக்கல்களால் சிக்கலின்றி
உருவாக்கிடும் திண்மை
இங்கேதான் இருக்கிறது..!

சூறைக்காற்றில் சிக்கிய
சிறுதுரும்பின் சீரற்ற பாதையை
நிர்ணயிக்கும் அதிகாரம்
ஒட்டுமொத்த குத்தகைக்கு
ஏலத்தில் எடுக்கும் வன்மை..
இங்கேதான் இருக்கிறது..!

சிற்றின்ப சேற்றிலாடி
செலவற்ற அனுபவங்கள்
சிந்தனை சிற்பிகளின் கூடாரங்களில் ..
சுதந்திரத்தையே கட்டில் மெத்தையாக்கி
சுயநலத் தொட்டில்களில்
சூன்யத்தை குழந்தையாக்கி மகிழும்
சந்ததிக்கு சேர்த்து வைக்கும் பிடாரர்கள்
இங்கேதான் இருக்க முடியும்..!

செல்லரித்த வர்ணாஸ்ரமம் வாழ்வதற்கும்
செத்துப் போன சாதிமுறை உயிர்ப்பதற்கும்
சொத்துகளை கணக்கின்றி சேர்ப்பதற்கும்
சொந்த மக்கள் சோற்றுக்கு பறப்பதற்கும்
வழிவகைகள் செய்தேனும் தாம் வாழ்வதற்கும்
இங்கேதான்..முடியும்..!

பட்டங்கள் பறக்க விடுவதற்கோ ..
பன்னாட்டு வேங்கைகள் பசியாறுதற்கோ..
எக்கேடும் கெட்டுப்போ..
ஏகாந்த இன்பம் எங்களுக்கே என்று
திக்கறியாத் தலைமுறையை அழிப்பதற்கு
இங்கேதான் முடியும்..!

இந்நிலையும் ஒருநாள் முடியும்..!
,

எழுதியவர் : கருணா (30-Mar-15, 8:21 pm)
பார்வை : 97

மேலே