அதிர்ஷ்டக்காரி - கருணா
![](https://eluthu.com/images/loading.gif)
விடிந்தால் முதலாவது
பிறந்த நாள் ..பெண்ணுக்கு !
தன் கையில் இருப்போ
இருபதே ரூபாய் ..
சம்பளத்திற்கு இன்னும்
இரண்டு நாளிருக்க..
கடன் கொடுக்கும் ஆளுமில்லை..
வாங்கிய சம்பளத்தை
வட்டியும் முதலும் கொஞ்சம்
வாடகை ..பால்காரர்
மளிகை பாக்கி ..
முதல் தேதியே கொடுத்தது போக
மூணு முழம் மல்லிகையும்
முன்னூறு ரூபாயும்
ஆசையோடு மனைவியிடம் தந்த பின்னே
அடுத்த வாரம் முதல் புதிய கடன்கள் வாங்கி
கழித்த மாதம் முடியுது நாளையோடு ..!
எல்லாம் சரி..நாளைக்கு என்ன செய்ய
ஒரு கேக்கு வாங்கக்கூட
வக்கின்றி வீதிமுனை டீக்கடையில்
விசனத்தோடு விதியை நொந்த
வெள்ளை உள்ளம் கொண்டவனும்
வீடு நோக்கி நகர்ந்து செல்ல..
வலுவற்ற கால்கள் அவை
வீடு கொண்டு சேர்த்த போது..
நப்பாசை கொண்டு தேடி பார்க்க
அலமாரி மேல்தட்டின் மூலையொன்றில்
ஐம்பது ரூபாய் நோட்டு ஒன்று
கிடைத்த நொடி ..கோடிக்கு சமம் ..
ஆசையோடு முத்தமிட்டான் ..
அடியே..நீ..அதிர்ஷ்டக்காரிஎன்று..!
அழகுத் தேவதையான அவன் குழந்தைக்கு ..
அந்நேரம் அடுக்களையில் அஞ்சறைப் பெட்டிதன்னில்
சேர்த்து வைத்த நூறு ரூபாய் எடுத்து தந்தாள்
இனிய மனைவி..ஏழெட்டு மாதமாக
சேர்த்திருந்த சிறுவாடு..என்று..!
அந்த இனிய பொழுதின் நினைவு
அந்த செல்வந்தர் நெஞ்சில்
எந்த நாளும் அழியாத கோலமாக ..
இருபது ஆண்டுகள் கடந்த பின்னும் !