மஞ்சள் குளித்த பெண்ணே

மஞ்சள் குளித்த பெண்ணே
==================================================ருத்ரா இ.பரமசிவன்


மஞ்சள் குளித்த பெண்ணே!

மங்கலமான குளிர்ச்சியில்

நனைத்துக்கொள் உன் கனவுகளை.

உன் கன்னங்கள்

உனக்கு வைரங்கள்.

உன் கண்களின்

கருந்திராட்சை இனிப்பை

கண்ணாடி பார்க்கும்போது

பருகிக்கொள்.

கொஞ்சம் சிரி போதும்.

இவர்கள் பாறாங்க‌ல் தூளாக்க.

கண்களில் அம்புகள்!

காலியாக்கி விடாதே

எல்லோர் மீதும் ஏவி.

ராமர்கள் வரும்போது

உன் அம்பராத்தூணி

வெறுங்கூடாகி விடலாம்.

அப்போது

அவர்கள் உங்கள் வீட்டு

பஜ்ஜி சொஜ்ஜிகளுக்கு மட்டுமே

குனிந்து கொண்டிருக்கலாம்.

பவுன் என்ன ரேட் என்று

மனத்து விளிம்பில் மாட்டியிருக்கும்

அண்ட்ராய்டு சிஸ்டத்தில்

கணக்கு போட்டுக்கொண்டு இருக்கலாம்.

கூர் தீட்டிய கனவுகளே

உன் விழிக்கணைகள்.

வீணாக்கி விடாதே.

கம்பராமாயணத்தின்

அண்ணலும் நோக்கினான்

அவளும் நோக்கினாள்

வரிகள்

இப்போதெல்லாம்

துருப்பிடித்துப் போயிருக்கலாம்.

பெண்ணே

உன் விழியம்புகள்

எத்தனை மராமரங்களை

பிளந்து கொண்டு போகவேண்டும் தெரியுமா?

நீ எழுதிய அல்லது படித்த‌

கவிதைகள் எல்லாம்

காகிதச்சடலங்களாய்

அந்த மூவர்ண சமுக்காளத்தில்

இறைந்து கிடக்கும்.

ஆம்!பெண்ணே!

பெண் பார்க்கும் படலத்தில்

ஆயிரம்

வாலி வதை படலங்கள்.

எந்தப்பக்கம் வாலி?

எந்தப்பக்கம் ராமன்?

இங்கு

சீதைகள் கூட‌

கிலோக்கணக்கில்

பழைய பேப்பர்க்கடை கிட்டங்கிகளில்

வியாபாரம் இல்லாமல்

தேங்கிக்கிடக்கிறார்கள்.

பெண்ணே விழிப்புடன் இரு.

பூப்பு வனத்தின்

கண்ணாடிச்சிறகு தும்பிகள்

உன்னோடு

கண்பொத்தி விளையாடட்டும்.

கவலை வேண்டாம்.

இவர்கள் எத்தனை கணக்குகள்

வைத்திருந்தாலும்

கணினியின்

பூலியன் அல்ஜீப்ரா கணக்குகளே

உன் நகப்பூச்சுக் குப்பிக்குள்

பத்திரமாக இருக்கட்டும்.

கோலம் போட்டாலும்

வாழ்க்கையின் "அல்காரிதத்தை"யே

போட்டுக்கொண்டு இரு.

உன் கற்பின் கற்பு

இந்தக் கல்வியே.

அஞ்சாமல் நில்.

ஓ பெண்ணே..

கண்ணாடித்தடாகத்தில்

பூ எறிந்து பார்.

அந்த அலைவட்டங்களில்

உன் "கிராஃபிக்ஸை" எழுது.

எச்சமயத்திலும்

அத்தடாகம் உன் கண்ணீரால்

நிரப்பப்பட்டு விடலாம்.

கவனமாய் இரு.

பெண்ணே

கவனமாய் இரு.

===================================================ருத்ரா




====================================ருத்ரா

எழுதியவர் : ருத்ரா (7-Apr-15, 2:21 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 97

மேலே