முதல் கவியரங்கம்

கவியரங்கம்
(5/04/2015 ஈப்போ கிந்தா இந்தியர் மண்டபத்தில் நடைபெற்ற பேராக் இஸ்லாமிய இலக்கிய விழாவில் நான் பங்கு கொண்ட முதல் கவியரங்கக் கவிதை )


ஓரிரு தேநீர் கொள்ளும்
ஒருமணி நேரத் திற்குள்
தேறிட வைத்து யாப்பை
தெளிவுறக் கற்பித் தென்னை
வேறொரு தடவை வாய்த்தால்
விளக்குவேன் இன்னும் என்றார்
நேரிருந் தென்னை வாழ்த்தும்
நிலைக்கின்று ஏங்கு கின்றேன்

மறைபொருள் விரித்துக் கூறும்
மதகுரு அவரா இல்லை
நிறைகுடம் என்றே தன்னை
நினைத்தவர் தானா இல்லை
இறையருள் ஒன்றே எண்ணி
இனியநம் தமிழாய் வாழ்ந்த
இறையருட் கவிஞர் சீனி
இழிநிலை மாணவன் நான்

திரும்பிடும் திசைகள் எங்கும்
திருமுகம் காட்டி நிற்கும்
அரும்பெரும் இறையே உன்னை
அடிமைநான் வணங்கி இங்கே
கரும்பினும் இனிதாம் எங்கள்
கலைநிறை தமிழால் இன்று
விரும்பிடும் நபியின் வாழ்வை
விளக்கிட முயலு கின்றேன்

முகமதின் பன்மு கங்கள்
முறைபட பாடக் கேட்க
அகமதில் நாட்டம் கூடி
ஆர்வமாய்க் கூடி உள்ளோம்
வகைவகை மேடை கண்ட
வல்லவர் தலைமை ஏற்று
தகைமையை அமர்ந்திங் குள்ளார்
தலைவரின் பேர்தான் என்ன ?

எக்கனியும் நிகரில்லை எந்தமிழர்
இனியதெனக் கண்டு சொன்ன
முக்கனியின் முன்னேதான் அதுபோல
முகம்மலர வீற்றி ருக்கும்
பக்கபல மாகதமிழ் வைத்திருக்கும்
பாவலர் நம்அசன் கனிபோல்
சொக்கவைக்கும் தமிழ்சுவைபோல் செவியினிக்க
சுகம்தரவே எவரு முண்டோ?..

உலகினில் தோன்றும் மாந்தர்
உயர்வுற வேண்டி அல்லாஹ்
பலபல தூதர் தம்மை
பாரினில் தோன்றச் செய்து
நலவழி காட்ட வைத்து
நம்மையும் தேறச் செய்ய
தலைவராம் அண்ணல் நபியை
தாயெனத் தந்தான் இங்கு

மடமையின் பிடியில் சிக்கி
மனிதர்கள் மாக்க ளாக
கடமையை மறந்தே அன்று
களிப்புடன் திரிந்த நாளில்
நடைமுறை மாற்றி வைக்க
நாயனின் அன்பும் கூட
அடைமொழிக் கேங்கா நபியை
அருட்கொடை யாகத் தந்தான்

பதவியின்மேல் பணமதின்மேல் பற்று வைத்து
பழிபாவம் அஞ்சாமல் பங்கம் செய்து
உதவிடுதல் கடமையென உணர்ந்தி டாமல்
ஊதியமே பெரிதென்று உண்மை விட்டு
இதைகொடுத்தால் அதைதருவேன் என்னும் போக்கில்
இழிவான அரசியலே வாழும் இன்று
எதைகொடுத்தும் வாங்காது ஏகன் வாக்கை
எத்திவைத்த தேநபியின் இனிய வாழ்க்கை

அரசியலில் அண்ணல்நபி அடைந்த வெற்றி
அதுபற்றி சொல்லிடவோ அதிக முண்டு
பிறசமயத் தலைவர்களும் பேசி மெச்சும்
பெருமானின் திறமையினை பேதை நானும்
முரசறைய வந்துள்ளேன் முடிந்த மட்டும்
முதல்முறையாய் முயலுகிறேன் பொறுமை கொள்க
அரசரென நம்நபிகள் ஆளும் போதும்
அவர்கொண்ட அழகியஅப் பொறுமை போலும்

முகமதரின் வாழ்வதுவோ முழுதும் பாடம்
முயன்றதனைக் கற்றாலே மகிழ்ச்சி கூடும்
மிகபுதிதாய் சொல்லவொரு சேதி இல்லை
மேல்நிலையைப் பெறவேண்டின் வெற்றி வேண்டின்
அகமுழுதும் அல்லாஹ்வை எண்ணி நாளும்
அன்புநபி கூறும்வழி அழகாய்ப் பேணி
செகமிதனில் மறுமையினில் தெளிவாய் வென்று
செழித்திடலாம் வாருங்கள் சிந்திப் போம்நாம்

ஒன்றிறைவன் ஒன்றுகுலம் இதுவே உண்மை
உலகத்தார் யாவருமே ஒருதாய் மக்கள்
என்றிறையின் சேதியினை எடுத்துச் சொல்ல
எதிர்ப்பினையே எதிர்பார்க்கா வண்ணம் கூட்டி
கொன்றிடவும் துணிந்தனரே குறைஷி மக்கள்
கொடுமையினைத் துணிவுடனே தினமும் செய்தும்
மண்டியிட மனமின்றி மாற்றம் தேடி
மதினநகர் நோக்கிநபி பயணித் தார்கள்

தலைவரென இருப்பவர்கள் தலைமேல் கொண்டு
தரமுடைய நபிவழியை மதிக்க வேண்டும்
விலைமதிக்க முடியாத வெற்றி எல்லாம்
வீடுதேடி வந்தடைய பொறுமை வேண்டும்
நிலைதவறா சிந்தனையே நிதமும் வேண்டும்
நிசத்திற்காய் நின்றிறக்கும் வீரம் வேண்டும்
இலைமறையாய் வாழுகின்ற எளிமை வேண்டும்
இறைத்தூதர் அரசியலில் இவையே சாரம்

எந்தவொரு பிரச்சனையும் எளிதாய்த் தீர
எதிரியுடன் என்றாலும் கலந்து பேசல்
தந்திடுமே நன்மைகளை தகர்க்கும் தீமை
தகுமுறையில் நடைமுறையில் நபிகள் வாழ்ந்த
சிந்தனையைப் புறந்தள்ளி சினத்தைக் கூட்டி
சீரழிக்கும் அரசியலால் சிதையும் நம்மை
முந்திவரும் அரணாக முழுதாய்க் காக்கும்
முகமதுவின் அரசியலே வளமா யாக்கும்

உலகினிலே முதன்முதலாய் ஒழுங்கு செய்த
ஊராட்சி முறையொன்றை உறுதி கொண்டு
விலகிடவே வேண்டியன வேண்டும் விதிகள்
விவரமுடன் எழுதியதோர் பெருமை மற்றும்
நிலவிவந்த சிறுகலகம் பெருங்கல கங்கள்
நீண்டிருந்த குலப்பகைமை நீக்கி வைத்து
அழகுடனே அவுஸ்மற்றும் கஸ்ரஜ் பிரிவை
அகபாவின் உடன்படிக்கை யாலே சேர்த்தார்

ஆட்சியது கைத்தளத்தில் அமைந்த போதும்
அமைதிநிலை ஒருசிறிதும் அசையா வண்ணம்
மாட்சிமையாய் குறையற்ற முறையில் வாழ்ந்த
மனம்மகிழ வரும்தடைகள் வருத்தம் களைய
சாட்சியமாய் குர்ஆனைத் துணையைக் கொண்டு
சாந்தநபி சாந்திநிலை நிலவச் செய்தார்
காட்சிக்காய் கடமையினை செய்யும் நம்போல்
கறைபடிந்த அரசியலை கல்பால் வெறுத்தார்


ஒற்றுமையின் முக்கியத்தை உணர்த்தும் வண்ணம்
உலகத்தில் யாவருக்கும் முன்மா திரியாய்
நற்றுணையாய் நாம்கொண்டு மகிழ்ச்சி கொள்ள
நல்வழியாம் நபிவழியைப் பற்றிக் கொள்வோம்
கற்றுயர்ந்து பிரிவினைகள் களைந்து சேர்ந்து
கருத்துடனே கண்மணியாம் இரசூல் சொன்ன
மற்றவரின் நலம்பேணி மாண்பைக் காக்கும்
மகத்தான அரசியலை மனத்தில் கொள்வோம்

இதுவரையில் நான்சொன்ன கவியில் குற்றம்
இருந்திட்டால் பெரியோரே மன்னித் தேற்று
எதுவரையில் நன்மையுண்டோ எடுத்துக் கொள்க
எளியேன்நான் பிழைசெய்தல் இயல்பு தானே
புதுவரவாய் எனைநீங்கள் புரிந்தே ஏற்றால்
புகழனைத்தும் இறைவனுக்கே பூரிப் பேனே
பொதுவினிலே கவிபாடும் வாய்ப்பைத் தந்த
பொன்னைநிகர் மனத்தோரே நன்றி நன்றி



முஹம்மது நௌபல் அப்துல் அஜீஸ் @ அபி
கிள்ளான்

எழுதியவர் : அபி (10-Apr-15, 12:58 pm)
பார்வை : 193

மேலே