இசைத்தமிழ் அழுகிறது
(இசைமுரசு Eஇ.எம் ஹனிபாவின் மரணம் கேட்டு என் மனம் அழுதது ..)
இறைவனுக்கும் இரசனை யுண்டு!
இனியதமிழ் இசை கேட்க...
இசைமுரசு ஹனிபாவை
இப்போது அழைத்துக் கொண்டான்..
இன்று,
விரல்விட்டு எண்ணுகின்ற
விபரீத நிலையினில்தான்
விழுமிய நல்கவிஞர்களும்...
வீரியம்கொள் கலைஞர்களும்..
அவர்களிலே இவரொருவர்!
அல்லாஹ்வைப் புகழுவதில்,
அண்ணல்புகழ் பாடுவதில்,
நல்ல தமிழ் உச்சரிப்பால்
நம்மிதயம் உருக வைப்பார்..
முழக்கமிடும் தம்குரலால்
மூன்றுதலை முறைகண்டார்
வழக்குமொழி பாடல்களால்
வானளவு புகழ்கண்டார்
இறைவனிடம் கையேந்த
எல்லோர்க்கும் சொல்லி விட்டு
இன்றவரோ சென்று விட்டார்
ஏங்கிடுதே இசைத் தமிழும்!..
அவருடைய பாவங்கள்
அனைத்தையுமே மன்னித்து
சுவனமதை நல்கிடவே
இறைவனிடம் கையேந்துவோம்!