தேவையா தேடல்
மீன் தேடிப் புறப்பட்டேன்
“மீனு மீனு”
எதிரே வந்த மீன்காரி வாய்மைத்தாள்
“மீனை வெளியிலே தேடறியே
தண்ணீருக்குள் தேடு”
யாரையோ எதையோ நினைத்தோ
மீன்கள் சதா பெருக்கும்
கண்ணீர் கரையைக் கோபத்தோடு அலசிவிட்டு
திரும்பிக் கொண்டிருந்தது
நீருக்குள் நான் நுழைய
எனக்குள் நீர் நுழைய
யாரோ மந்திர மலர்களை ஒலியாக்கினார்கள்
“தண்ணீரின் ஆதாரம் அறிவாயா நீயே
அறிந்தவன் தன்னில் நிலைபெற்றவன் ஆவான்
தண்ணீரின் ஆதாரம் தெளிவாய்நீ தீயே
தெளிந்தநீ தன்னில் நிலைபெற்றவன் ஆனாய்”
நீரிலிருந்து என்னை எடுக்க
என்னிலிருந்து நீரை எடுக்க
சிறுவன் ஒருவன் பாடம் படித்தான்
“ஹைட்ரஜன் வாயு தானே எரியும்
ஆக்சிஜன் வாயு எரிதலை ஊக்குவிக்கும்
இருகூறு முன்னதும் ஒருகூறு பின்னதும்
இணைந்து கிடைப்பது தண்ணீர்”
தெளிந்து எழுந்து நடந்தேன்
“மீனு மீனு” மச்சாவதாரி கேட்டாள்
“மீனைப் பார்த்தியா”
“நீரைத் தெரிந்துகொள்ளத்தான்
நீரிலேயே வாழும் மீனைத்தேடிப் போனேன்”
“தேவையா உன்தேடல் வீட்டில் உன்னைத் தேடுகிறார்”
வீட்டில் நான் நுழைய கண்ணீர் பெருக
என்னில் வீடு நுழைய கண்ணீர் பெருக
அந்த மீன்களைப் போல.