நினைவெல்லாம் நீ
![](https://eluthu.com/images/loading.gif)
சாக்கடையைக்
கடக்கும்போதும்
பூக்கடையின்
வாசம் உணர்கிறேன் .......
காரணம்
நினைவில்
நீ !
=================
பாடுபொருளில்
உன்னை வைத்தால்
எனது கவிதைகளுக்குப்
பேய் பிடிக்கிறது !
=================
உன்னைப் பார்க்கும்
போதெல்லாம்
அங்கே இங்கே
ஈஷிக்கொண்டு
ஐஸ்க்ரீம் தின்னும்
ஒரு குழந்தையின்
வாயாகி விடுகின்றன
எனது கண்கள் !
=================
நீ
புன்னகைத்துக் கொண்டேயிரு
உதடுகள்
வலிக்கும் வரை .....
நான்
பார்த்துக் கொண்டேயிருக்கிறேன்
கண்கள்
வலிக்கும் வரை ...........
=================
எனது
கவிதைகளுக்கு
அணிவித்து
அழகு பார்க்கிறேன் ......
கொடியில் காயும்
உனது ஆடைகளை !
=================
கடல்
நீரிலிருந்து
உப்பு பிரித்தெடுக்கக்
கற்றுக் கொண்டவர்கள்,
உனது
கைக்குட்டையிலிருந்தும்
சர்க்கரை
பிரித்தெடுக்கக்
கற்றுக் கொள்ளட்டும் !
=================
ஒரே முத்தத்தில்
ஒட்டுமொத்தமாக
உன்னை
முத்தமிடுதல்
எப்படியென்று
மெனக்கெட்டு
யோசித்ததில்
உதித்தது இதுதான் .....
" உனது பெயரெழுதி
அதை முத்தமிடுதல் "
=================
கிலுகிலுப்பை
பிடுங்கப்பட்ட
குழந்தை போலாகிறேன்
ஒவ்வொருமுறையும்
நீ
பை பை சொல்லிக்
கிளம்பும் போது..........
=================