தேவதை என்பது வெறும் வார்த்தையல்ல
 
            	    
                உனது விழிகளின் வீணையில்
இமைகள் இசை மீட்டுகிறது...
உனக்கு கடிதம் எழுதும்போதெல்லாம்
என்னை விட காகிதமே
அதிகமாக சந்தோசப்பட்டுக் கொள்கிறது...
பூக்களைப் போல நீ இல்லை
எல்லா பூக்களும் 
உன்னைப் போலவே இருக்கின்றன...
மௌனம் கூட அழகாகிறது
நீ உறங்கும் பொழுது...
உன் இதழ் தொட்டதும் 
வெட்கத்தில் சிவந்து
ஒரு மடங்கு சிவப்பு அதிகமானது 
உதட்டுச் சாயத்திற்கு...
இதுவரை இசையென்று இருந்ததெல்லாம்
இல்லாமல் போகிறது
உன் கொலுசு சத்தத்தில்...
நீ
வெளியில் வராதே 
வெயில் வேடிக்கைப் பார்க்கிறது...
உன் பாத சுவடுகளை 
அழிக்க மனமில்லாமல் 
அலைபாய்கிறது அலைகள் கூட...
நீ 
கண்காட்சிக்கு செல்லும்போதெல்லாம்
கண்கொள்ளா காட்சியாகி விடுகிறது
அந்த இடம்...
இரவில் மட்டும் இருந்தால் 
அது நிலா 
எல்லா நேரத்திலும் இருந்தால்
அது நீ...
உனது கூந்தலில் சூடியிருந்த
மல்லிப் பூச்சரம்
மலர மறந்து மொட்டுக்களாகவே இருந்தன
மலர்ந்த உன் முகத்தைப் பார்த்து...
தேவதை என்பது 
வெறும் வார்த்தையாகவே இருந்தது
உன்னை பார்க்காதவரை...
************** ஜின்னா **************
	    
                
