இந்தியாவில் நாம் இல்லை

இழிவு கொண்ட மனிதரென்பது
இந்தியாவில் இல்லை
தமிழகத்தில் உண்டு
இழிவு உண்டு என்பதை
இந்த எழவு
கண்டு சொல்கிறது

இந்தியாவில் நாம் இல்லை
மிச்சத்தையும் வேக வைக்கும் முன்
இதை வேறு வகை
ஆக்க வேண்டும்

சுடப்பட்டது தமிழன் அல்ல
தமிழகம்

நேர்மையற்ற துப்பாக்கிகளில் இருந்து
வெளியே குதித்து
தோட்டாக்கள் தற்கொலை

என்கவுண்டரில்
எண்ணிக்கைகள் கவுண்ட் இல்லையாம்

மனிதர் உயிரை
மனிதர் பறிக்க
மனிதர் சாக
மனிதர் உழைக்கும்
பிழைப்பு இங்கு மட்டும் தான்

செத்து கிடக்கும் மனிதத்தை
எத்தனை முறை
பரிசோதிப்பீர்கள்
வலி தாங்க முடியாமல்
விழி திறந்து விடப்போகிறார்கள்

மரத்தை கடத்தப் போனவர்களை
மரணம் கடத்திவிட்டது

காட்டுக்குள் மனித வேட்டை
ஓட்டுக்கும்
நோட்டுக்கும்
வந்த சாட்டை

சட்டம் சுட்டபின்
ஒளிந்துகொண்டது
அதை ஏன்
வலிந்து கூப்பிடுகிறீர்கள்

யாரை விசாரிப்பது
இந்த போலீஸ் திருடன் விளையாட்டில்
பாவம்
விளையாட்டு புரியாமல்
விதி முடிந்து கிடக்கிறார்கள்

மரங்கள்
மரணங்களையும் விளைவிக்கிறதா
அல்லது அவையும்
இவைக்கு ஒரு விலை சொல்கிறதா
வலை விரித்தது மனிதர்களுக்கா
ஐயகோ இது அவமானம்

உருக்குலைந்து கிடக்கும் உடல்களை
சுமந்த
கருக்குழிகளின் நிலவரத்தை
விவரிக்க முடியுமா

கூலிகள்
வேலி தாண்டியதற்கு
தாலிகள்
கழுத்து தாண்ட வேண்டுமா

வட்டமிட்ட அரசியல் கழுகுகள்
பிணத்தை பார்த்ததும்
மேடை கட்டிவிட்டது
பாடை கட்டும் முன்
பிணந்தின்னிக் கழுகுகள்
பணம் தின்று கொழுத்தவர்கள்

அறிக்கைகள் பல விடும்
அரசியல் வியாபாரிகளே
இருக்கையை உங்களுக்கு கொடுத்தால்
இரு கையையும் எதை
பொத்திக் கொள்ள பயன்படுத்துவீர்கள்


குறிப்பு : ஆந்திராவின் காட்டில் மரம் கடத்தியதாக சுடப்பட்ட 20 தமிழர்களுக்காக ......

எழுதியவர் : Raymond (12-Apr-15, 7:33 pm)
பார்வை : 71

மேலே