ஆரூடங்கள் பொய்த்த வாசற்படி

இவன் வாசற்படி
ஏறிய நேரமாகவும் இருக்கலாம்...

அப்பாவின் மரணம்
குறித்த ஆரூடங்கள் இந்த
அமாவாசைக்கும் தள்ளிப் போன
உந்துதலில்
நான் அவ்வாறாக வரையறுத்திருக்க....

இவனும்.. ஒதுங்கியவாறே
புன்னகைத்து நகர.... வருகைக்கு காத்திருந்த
அப்பாவும்.... செருமிக்கொண்டே
சிரித்துக் கொண்டார்.....

இப்போதைக்கு அல்ல... மீதமுள்ள
எப்போதைக்கும் அவரால்
அதுமட்டும்தான் முடியும்...

இவனுக்கு...நிறைய
வேலையிருக்கிறது... மூத்திரக் கோவணம்..
மலம் கசிந்த வேட்டித்துணியென...
துவைத்து... சர்க்கரை தின்றுவிட்டிருந்த
கட்டைவிரல் கழிந்த சதை
துடைத்து....

கடைசியாகவே தரை துடைப்பது
இவனின்... வழக்கம்...

வழக்கம்போலவே எல்லாம் முடித்து..
வாசற்படி இறங்கியவனிடம்....

ஏலே.... நேத்து வச்ச கறிக்கொழம்பு
மீந்திருச்சி...
பின்வாசக்கட்டுக்குப் போ....
இந்தா வாறன் எனச் சமையல் கட்டுக்கு
நடக்கையில்....

வழக்கம்போலவே செருமியபடி
சிரித்துக்கிடந்திருந்தார்...... அப்பா....!!

எழுதியவர் : நல்லை.சரவணா (13-Apr-15, 9:58 am)
பார்வை : 104

மேலே