மலைவாழ் மக்கள் நாங்கள்

மலைவாழ் மக்கள் நாங்கள்!!

குறிஞ்சி முல்லையென
விரிஞ்சி திரிவோமே
பரந்த இடமெனினும்
படுக்க இடமில்லையே

ஓலக் குடிசையில்லை
ஒண்ட வழியுமில்லை
நீண்ட மலையும்காடும்
நீட்டும் கரங்கள்போலே

அடையாள அட்டையில்லை
அரசு நிதியுமில்லை
அச்சாணி இல்லாவொரு
அந்தரத்தில் தொங்குவாழ்க்கை

பள்ளிப் படிப்பில்லை
பட்டணம் பார்த்ததில்லை
பேச்சுமொழி எதுவுமில்லை
பேசிட வழியுமில்லை

நாகரீகம் தெரியாது
நல்லசோறு கிடையாது
நாங்களுதான் வாழுகிறோம்
நாளுமெல்ல வீழுகிறோம்

நாட்டுக்குள்ளே நல்லபல
நாட்டாமை செய்வாருண்டு
நயவஞ்சக நரிகளுண்டு
நாய்களுண்டு பேய்களுண்டு

தேசமென பேசுகின்றார்
நேசமுடன் நாடுகின்றார்
காரியங்கள் முடிந்தபின்னே
காரிமுகத்தில் துப்புகின்றார்

எந்தவகை தேசமென்றோம்
எங்கள்மொழி என்னவென்றொம்
உங்களுடன் சேர்க்கசொல்லி
உண்ணாவிரத மிருந்துபார்த்தோம்

கோரிக்கை சிலவைத்தோம்
கோமாளி மக்கலென்றார்
மன்றாடி பார்த்துவிட்டோம்
மலைவாழ் மக்கள்நாங்கள்

மக்களாட்சி என்கின்றார்
மக்களுக்காக பேசுகின்றார்
மக்களென்றால் யாரென்றோம்
மாக்களுக்கு புரியாதென்றார்

மாக்களாக கேட்க்கின்றோம்
மக்களாக மாறவேண்டி
மலைவாழ் மக்களுக்கு
மாற்றம் எதர்க்கென்றார்

தரகர்போல் வந்திடுவார்
தர்க்கங்கள் புரிந்திடுவார்
தருவோம் பணமென்று
தந்திரமாய் பேசிடுவார்

வேலையும் இல்லை
கூலியும் இல்லை
வேலைக்கு போனவர்கள்
வீடும்திரும்ப வில்லை

திடுபுடுன்னு வராங்க
திருடருன்னு சொல்றாங்க
துப்பாக்கி முனைகாட்டி
துடுக்காக பேசுறாங்க

தரித்திர கோலத்தாலே
தவிர்த்திடவு முடியவில்லை
தடுக்கவும் வழியில்லை
தன்மானம் காக்கவேண்டி

நாட்டுக்குள்ளே நாங்கவந்தா
நாயப்போல விரட்டுறீங்க
உங்கப்போல வாழவேண்டி
எங்களுக்கும் ஆசையுண்டு

அடையாள அட்டைக்கே
அவதூறு செய்றீங்க
இருக்க இடந்தரவில்லை
இடவொதிக்கீடு செய்றீங்க

நாளுகாலு உள்ளதெல்லாம்
நடுவூட்டுல நடக்கும்போது
நாங்கமட்டும் ஒதுங்கயிங்க
நடுவீதிகூட இல்லையேங்க

மலைவாசி மக்கள்தான்
மலிவாச்சி உயிர்கள்தான்
மனசாட்சி உள்ளவங்க
மனுசங்களை காத்துடுங்க

நல்லோரே நாட்டோரே
நாணயம் அறிந்தோரே
நாங்களும் வாழவேண்டி
நல்லதுபல செய்வீரே!!

தோழமையுடன்,
பார்த்திபன், ப
11/04/2015

எழுதியவர் : பார்த்திபன்.ப (13-Apr-15, 10:47 am)
பார்வை : 354

மேலே