எங்களுக்கு விடை தெரிந்த கேள்விகள்
சரக்கு ரயில் என்பது
மதுபானங்கள் ஏற்றி வரும்
ரயிலல்ல
ஆண்டிமணி என்றோர்
உலோகம் இருந்தாலும்
கோயில் மணி பித்தளையால்தான்
செய்யப்படுகிறது
மோடி மஸ்தானின் மாந்தரீகம் என்பதும்
மோடி மேஜிக் என்பதும்
வேறு வேறு
இந்தியாவின் ‘கேபிட்டல்’
வெளிநாடுகளில் இருந்தாலும்
‘புதுடெல்லி’ என்பதுதான்
சரியான விடை
நாட்டைத் தூய்மையாக்க
நாம் யாரும்
சுத்தமானவர்களாக
இருக்கவேண்டியதில்லை
எங்களுக்கு விடை தெரிந்த
இது போன்ற
பொது அறிவுக் கேள்விகள்
எந்தப் போட்டித் தேர்விலும்
கேட்கப்படுவதில்லை