மன்மத வருசத்தில் மென்மலராகு

மன்மத மென்னு மழகு வருசத்தில்
உன்மத மென்மத மென்றன்று – நன்மதத்
தென்றல் நமக்குள் திரிந்திட நாமொன்றி
மென்மல ராதல் மிடுக்கு.

நில்லாமல் சுற்றும் நிலமடந்தை என்றென்றும்
புல்லாக நெல்லாக புத்தெழிலாய் –சொல்லாமல்
உள்ளூர தேன்பாய்ச்சும் உள்நோக்கம் நீகண்டு
கள்ளூறும் இன்பம் கொடு

மன்மத ஆண்டு மலர்போல் மகிழ்ந்தென்றும்
அன்புடன் இன்பம் அடைந்திடத் – துன்பம்
துயரம் விலகிட தூய்மை மனதில்
உயர்ந்திடநல் எண்ணம் உடு.

பூக்கும் புத்தாண்டு பூமியில் எல்லோர்க்கும்
காக்கும் கரம்நீட்டி கண்ணிமையாய் –ஆக்க
கருணை பொழியும் கருமேகம் ஆக
விருப்பம் கொண்டு விடு.

*இனிய எழுத்து நட்பு உள்ளங்கள் அனைத்திற்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (14-Apr-15, 2:35 am)
பார்வை : 692

மேலே