பிக்காசோக்கள்

பிக்காசோக்கள்...

தூரிகைகள் எதுவுமின்றி - வண்ணச்
சுண்ணம் கொண்டு...

தேசப்பற்று முதல்
தெய்வபக்தி வரை - அனைத்தையும்
அழகழகாய்த் தீட்டுகிறான்.

அவன்
வாழ்வில் மட்டும் - ஏனோ
கருப்பு வண்ணம்
நீங்க மறுக்கிறது.

பரபரப்பான
அந்தச் சாலையில் - பார்த்து
ரசிக்காது செல்லும்
மக்கள் மத்தியில்...

ஆட்சி மாற்றங்களை
விரைவாகவே நிகழ்த்துகிறான்!
அனைத்து மதங்களையும்
ஒன்றாக்கி வெல்கின்றான்!

பறவைகள், விலங்குகள் - ஏன்
பரபரப்பாய் பறக்கும் - இந்த
மனித இயந்திரங்களையும்
அவன் வண்ணமாக்கியிருக்கிறான்!

எனக்குத்
தெரிந்த வரையில் - பிக்காசோ
இவனாகத்தான் இருக்கமுடியும்!

ஆம்
நெட்டித் தள்ளும் - அவன்
நெஞ்சு எலும்புகளின்
எண்ணிக்கையை காட்டிலும் எண்ணிலடங்கா
ஓவியங்களை - அவன்
தீட்டிக் கொண்டேயிருக்கிறான்!

அடுத்தடுத்த சாலைகளிலும்
இவன்போல்...
ஆயிரமாயிரம் பிக்காசோக்கள்
இன்னுமின்னும் எதையெல்லாமோ
தீட்டிக் கொண்டேயிருப்பார்கள்
ஒருவேளை உணவுக்காக.

- சுகன்யா ஞானசூரி

எழுதியவர் : சுகன்யா ஞானசூரி (14-Apr-15, 11:02 pm)
பார்வை : 51

மேலே