சாவுக்கு ஆடுபவனின் சாவு

அனைத்துத் தெருவிலும்
எல்லாச் சாவிற்கும்
கூத்தாடிப் போகிறவனின்
சாவின்று ...

உதிர்கிற பூக்களை
தன்னகத்தே வாங்கி
அவனாடிச் சென்ற
தெருக்களனைத்தும்
ஆடியவனின் பிரேதம்
சுமந்த பிரக்ஞையணிந்து
அமைதியாய்க் கிடக்கிறது ...

உடல் மூடி கால் திறந்து
ஊர்வலம் போய்க்கொண்டிருக்கும்
அவன் விரல்கள் மீது
ரீங்கார வட்டமிடும்
ஈ மொய்த்து ஏமாறும்
அசையாது கிடக்குமவனது
ஆடா காலமர்ந்து ...

சாவு வாசம் மறைக்க
கொளுத்தி வைத்த
ஊதுவத்தி புகை
நெளிந்தாடி
அவனுடைய கூத்தாட்டம் போல்
காற்றில் கரைகிறது ...

உடல்வாழ்வுப்
போர்க்கள விளிம்பில்
மரணத்தின் ஆட்டம்
நரம்புகள் அறுபட
பறையிசை மீட்டி நீளும்
பாசக்கயிற்றில்
பிணைந்து கிடக்க
அவனது ஆட்டம் பற்றி
ஏதொன்றுமில்லா
ஓராயிரம் அசரீரிச்
சம்பாஷணைகள்
இறுதி ஏற்பாடுகளுடன்
பிரேதத்திற்கு முன்பே
மயானமடைகிறது ....

ஏதேதோ எதிர்பார்ப்புகளோடு
திரும்பித் திரும்பிப் பார்க்கிறேன்
பறையொலி கேட்கும்
தூரத்தில்
உள்வெளி நிரம்புகிற
சுவாசக்காற்றாய்
கால மீன்கள் கடிக்க
அவனாட்டம் போலின்று
எவனாட்டமுமில்லை .

எழுதியவர் : பாலா (19-Apr-15, 6:43 pm)
பார்வை : 167

மேலே