வலை கண்டு எழுந்த அலைகள்---01
20-04-2015
செந்தண்மை பூண்டொழுகும் சிந்தனை கொண்டவருள்
வந்ததேன் சாதி வழக்கு?
***
கூவட்டும் கோழிகள் கூத்தடிக்கும் வானரங்கள்
தாவட்டும் வேண்டுவன தாம்பெறட்டும்! - காவலுமே
ஊதட்டும் எச்சரிக்கை ஒவ்வொருவர் தம்பணியில்
மார்தட்டும் ஆட்சி,எனும் ஆறு!!!!
****
எடுக்கேன் எழிலாக என்பேழைக் குள்ளே
மிடுக்காய் வரிசையில் மின்ன- அடுக்கி
அழகுக்காய் வைத்தே அடிக்கடி, பா ராத
பழக்கம்போல் வைத்திருப்பேன் பார்த்து!
வாங்கிப் படித்தால் வடிவம் தளர்ந்துவிடும்!
பூங்காவில் உள்ள பூச்செடிபோல்- பாங்காக
வைத்து மனைவி வடிவழகைப் போல்,தினமும்
பார்த்து ரசிப்பேன் தினம்!
உண்டால் சுவைக்கலாம்! ஊருக்கும் சொல்லலாம்!
கண்டார் விலகுவதைக் காணலாம்!- கொண்டாடிப்
பேசுவார் யாருண்டு? பேச்சில் தளங்களில்,கை
வீசுவார் முன்,இவைகள் வீண்!!!
*******
ஏற்கா தவன்போல் எதிர்த்தெதிர்த்துப் பேசிடுவான்
தோற்பதே சான்றோர் துணிவு!
===== =========== =======
கால்கள் புதைந்துவிட்டால் என்ன?
அந்த மரங்களைப் பார்!
கைகளை உயர்த்தி
ஆகாயத்தைப் பிடிக்க முயலுகின்றன!
****
நீளமும் உறுதியுமான
கைகளையும் கால்களையும்
தராவிட்டால் என்ன?
ஆண்டவன்
அப்பிராணிகளுக்குத்தான்
இறக்கைகளைக் கொடுத்திருக்கிறானே!
வேகமாக அசைத்தால்
உயரங்கள் வசமாகும்!
***
கீரைகள்
சாக்கடையில் வளர்வது பற்றி
யோசிப்பதில்லை....
சுத்தமான நீருக்காக
அழுவதில்லை அவைகள்...
அவைகளும்
பசுமையைத்தான் பேசுகின்றன..!
****
திட்டங்களெல்லாம்
கங்கோத்திரி நீரைப்போல
ஆரோக்கியமானதாகவே வடிகின்றன!
நடைமுறை என்ற
சமவெளியிலில் இறங்கும்போதுதான்
பல சீர்கேடுகள் கலந்து
சுகாதாரக் கேடாகின்றன?
பிறகென்ன
கரைகளில் நின்று
சுகாதரம் பற்றிப் பேசுகின்றோம்!
***
காணின் முழுனிலவே! காணா தமாவாசை!
வாணாள் முழுதும் இரவு!
*****
தன்னை மறுத்தவனைத் தாந்தகப்பன் என்பாளோ?
என்ன நினைத்தே எறிந்தாளோ?- பின்னது
முன்னவனை எண்ண முழுதும் உயர்ந்ததெனத்
தன்னுள்ளே கொண்டாள் தவிப்பு!
******
சோடிப் புறா,கண்டு சோகமேன் சுந்தரியே!
வாடி இருக்குமுகம் மாற்றிடுவாய்! -தேடியே
சென்றபொருள் சேர்த்தவனாய்ச் சீக்கிரமே வந்திடவே
நின்றபொருள் நின்னன்பன் நேர்!
********
தூண்டில் போடும் என்விழிகள்;
==துள்ளி விலகும் உன்கயல்கள்!
கூண்டில் மறையும் உன்பறவை!
==கொத்திப் பிடிக்கும் என்விழிகள்!
சாண்டில் யனும்,உன் தலைமுடியில்
==சரிவான்! நானும் ஒருபொருட்டோ?
பாண்டி என்றே நானானேன்!
==பாதக் கொலுசென் மேலாடும்!
ஆண்டி யில்லை இனி,நான்,உன்
==அழகே சொந்தம் ஆனதடீ!
********************* ********************************