இசை மறந்தக் கொலுசுகள் -ரகு

மென்னிரையைக்
குத்திக்கிழிக்கும் அலகுகளில்
உயிர்த்திருக்கலாம்
பொறாமையின் குரூரம் !

நட்புகளுக்குள்
பதுங்கும் பொறாமையின்
சீறலில்
காட்டு விலங்குகள்
தோற்றுப் போகும்!

பாறை இடுக்கு
வெடிகளாய் அடர்ந்திருக்கும்
அதன் அதர்வனம்!

தாம்பத்தியத்தில்
மெலிதாய் இழையோடும்
பொறாமை
நிச்சயம் பிடறிதட்டி
விழுத்தியிருக்கும் நீதிமன்றத்தில்!

புதிதாய்த் தெரியும்
எவர்கண்ணிலும் தூசி தூவத்
துடித்திருப்பது அதற்கான
பொழுதுபோக்கு!

மிளகாய் வற்றல்
நனைந்த குங்குமம்
எலும்பிச்சை சகிதமிருக்கும்
முச்சந்தியைத் தாண்டி வரும்
அறியாமையும் பொறாமைக்குண்டு !

சக தோழனானக்
''கண்ணு வைப்பது"வும்
காதோடு காத்தாய்க்
கிசுகிசுத்துக் கொள்ளும்
சூடத்தின் தகிப்பு சுகமென !

யாரோ
அட்சயத்திரிதிக்கு
நகை வாங்கியதாக
வரிந்து கட்டியப் பொறாமையின்
அலப்பரையில்
இசை மறந்திருந்தன கொலுசுகள் !

எழுதியவர் : சுஜய் ரகு (22-Apr-15, 9:26 pm)
பார்வை : 125

மேலே