பனிப்பூக்கும் பகலோடு-ரகு
வழுக்கும் தரை பற்றி
வழியுணரக் காத்திருக்கும்
சிறு வெட்டுக்கிளியொன்றும்
மொய்ப்பின் அவசியமிராத
விடிகாலையைச் சபித்துக் கொண்டிருக்கும்
ஈ போலப் பிறிதொன்றும்
நிலைத்து நிற்க அனுமானித்தது
என் தேடலை
விளக்கினின்று விலகிநின்று
வயிறு நிறைத்தப் பல்லியொன்றும்
உச்சுக்கொட்டி வெறுப்பேற்ற
அவ்வப்போது மணிக்கட்டைத் திருப்புவதுபோல்
மின்விசிறிக் காற்றில்
மடங்கி விரியும் காகிதத்தின்
துரிதப்படுத்துதலிலும்
என் தூண்டிலிலிருந்து விடுபட்டுக்
கரைந்து கொண்டிருந்தது நாழிகை
சற்றொப்ப ஜன்னல் தட்டும்
ஓசை கேட்ட பிரம்மையில்
திறந்து பார்க்கிறேன்
பனிப்பூக்கும் பகலோடுக்
குலாவிக் கிடந்தனக் கவிதைகள் !