புன்னகைச் சிறகுகள் நூல் ஆசிரியர் கவிஞர் சாந்தா வரதராசன் நூல் அணிந்துரை கவிஞர் இரா இரவி

புன்னகைச் சிறகுகள் !

நூல் ஆசிரியர் : கவிஞர் சாந்தா வரதராசன் !

நூல் அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

பாரதி பாஷோ பதிப்பகம் 30/8 கன்னிக்கோவில் முதல் தெரு, அபிராமபுரம், சென்னை-18.
கைபேசி : 98412 36965

நூல் ஆசிரியர் திருமதி சாந்தா வரதராஜன் அவர்களும்
திரு வரதராஜன் அவர்களும் சென்னை இலக்கிய இணையர் எனலாம். சென்னையில் நடக்கும் இலக்கிய விழாக்களுக்கு இணையராகச் சென்று சிறப்பித்து வருபவர்கள். ஓய்வுக்கு ஓய்வு தந்து விட்டு இலக்கிய உலகில் வலம் வருபவர்கள். இனிய நண்பர்கள், கவிஞர்கள் கன்னிக்கோயில் இராஜா, வசீகரன் ஆகியோர் நடத்தும் விழாக்களில் தவறாமல் பெறுபவர்கள். ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு வெளியிடுவதற்கு முதலில் பாராட்டுக்கள். புன்னகைச் சிறகுகள் நூல் பெயரே கவித்துவமாக உள்ளது. முகத்தில் புன்னகையை எப்போதும் அணிந்து இருந்தால் சிறகடித்து வானில் பறக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாக உள்ளது.
நூல் படிக்கும் படிப்பாளியையும் படைப்பாளி ஆக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைக்கு மட்டுமே உண்டு. ஹைக்கூ கவிஞர்கள் எண்ணிக்கை பெருகி வருவதற்கு காரணம் ஹைக்கூ கவிதை .வாசகர்களும் ஹைக்கூ படைப்பாளியாக வளர்ந்து வருகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு சாந்தா வரதராஜன் அவர்கள்.

நூலில் உள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் எனக்கு பிடித்து இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு முதல் ஹைக்கூ கவிதையே நம்பிக்கை விதை விதைக்கும் விதமாக உள்ளது. பாருங்கள்.

தூரக்கிழக்கில்
தொடரும் நம்பிக்கை
எழுகதிர்!
மகாகவி பாரதியாரை ரத்தினச் சுருக்கமாக மூன்றே வரிகளில் முத்திரை பதிக்கும் விதமாக முத்தாய்ப்பாக படம் பிடித்துக் காட்டியுள்ள ஹைக்கூ அருமை.

தீயை மையாக்கி
தீமையை எதிர்த்த தீ
பாரதி!

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழ்கிறவர்களில் அடுத்த வீட்டில் யார்? வசிக்கிறார்கள் என்பது கூட அறியாமல் மிக அந்நியமாகவே வாழ்கின்றனர். வீடுகள் நெருக்கமாக இருந்த போதும் மனித மனம் அந்நியமாக இருக்கும். உண்மை நிலையை படம் பிடித்துக் காட்டும் ஹைக்கூ நன்று.

அடுக்கடுக்காய் வீடுகள்
அந்நியமாகிப் போனது
மனித நேயம்!

மணல் கொள்ளையடித்து ஆறுகளை எல்லாம் பலவீனப்படுத்தி வரும் அவலம் சுட்டிடும் ஹைக்கூ..வித்தியாசமான உவமையுடன் விளக்கியது நன்று.

பல் விழுந்த பாட்டியாய்
பரிதாபக் காட்சி
ஆறுகள்.



ஈழத்தில் நடந்த கொடுமைகள் பற்றி எழுதாத படைப்பாளி யாரும் இல்லை. அப்படி எழுதாதவர்கள் படைப்பாளியே இல்லை. மனிதநேய-மற்றவர்களை படைப்பாளி எனக் கூற முடியாது. நூல் ஆசிரியர் சாந்தா வரதராஜன் அவர்கள் சிறந்த படைப்பாளி ஈழம் பற்றியும் படைத்து உள்ளார்.

ஆறுதலைத் தேடி
அழுது கொண்டிருக்கிறது
ஈழ மண்!

இன்றைய இளையதலைமுறையினர் துரித உணவு என்ற பெயரில் நச்சுக்களை உண்டு வருகின்றனர். நவீனம் என்று சொல்லி வருகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறும் விதமாக ஆரோக்கிய உணவான கீரை பற்றிய ஹைக்கூ நன்று.

குறைந்த விலை
உடல் நலம் பேணு
கீரை!

உலகமயம், தாராளமயம், பொருளாதார மயம் என்ற பெயரில் உழவனின் வாழ்வாதாரத்தையும் தொழிலாளியின் வாழ்வாதாரத்தையும் சிதைத்து வரும் அவலத்தை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

மெய்யாய் உழுதவன்
பசிக்குக் கிடைத்தது
நொய்க்கஞ்சி !

மூடநம்பிக்கையில் இன்று பலர் மூழ்கி தவிக்கின்றனர். தினந்தோறும் தொலைக்காட்சியில் ராசிபலன் பார்ப்பதும், சோதிடர் சொல்லும் வண்ணத்தில் ஆடை அணிவதும் அவர் சொல்லும் திசையில் பயணிப்பதும் மூடநம்பிக்கையின் உச்சம்.

பகுத்தறிவுக்கு திரை
கிளியிடம் தோற்கிறான்
மனிதன்!

நூலின் அணிந்துரையில் நூலில் உள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் மேற்கோள் காட்டி விடுவோமோ என்ற அச்சத்தில் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

மூட நம்பிக்கைகளே சாடும் விதமாகவும், ஊழல்வாதிகளின் அவலத்தை சுட்டும் விதமாகவும், சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளையும், குடியால் வரும் கேடு பற்றியும், ஆங்கில மோகத்தால் தமிழைச் சிதைக்கும் போக்கு பற்றியும், பெண்ணுரிமை பற்றியும், எழுதாத பொருளே இல்லை என்று சொல்லுமளவிற்கு பல்வேறு பொருளில் சிந்தித்து ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் சாந்தா வரதராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஹைக்கூ கவிதை நூல்களுக்கான பரிசளிப்பில் இந்த நூல் பரிசு பெறும் என்று உறுதி கூறி முடிக்கின்றேன்.


.
--

.
.

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (26-Apr-15, 8:17 am)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 143

சிறந்த கட்டுரைகள்

மேலே