போதையை பருகிய மேதை - உதயா
இலட்சியம் உணர்வு தாங்கிய
என் மார்ப்பினை
சொல்லால் உதைத்தவர்கள்
பல ஆயிரத்தை தாண்டினர்...
எனக்கான திறமையில்
நான் பாதையினைத் தேடும் போது
எம் முயற்ச்சியில் முட்களை விதைத்த
கரங்கள் எண்ணிலடங்காதவை...
விரத்தியில் மனமும்
நீர்காணா களிமண் தேசமானது
தோல்வியால் கண்களும்
கடலுக்கு மழலையானது...
நினைத்த இலட்சியத்தை
மகுடமாய் அடையவேண்டுமென
உணர்ச்சிஒளி வேதமாய்
நெஞ்சினில் எரிந்துகொண்டே இருந்தது ...
பல நாட்களுக்கு
வெறுப்பு விருந்தானது
அழுகை தாலாட்டானது
தெருக்கள் தாய்மடியானது...
நான் அடைந்த கஷ்டத்திற்கு
ஓர் நாள் வாய்ப்பு கிடைத்தது
பின்னாளில் நான் வாழ்ந்த வாழ்க்கையே
என்னை அண்ணார்ந்துப் பார்த்தது...
நான் நினைத்ததை
அடைந்துவிட்டதற்கு சான்றாய்
ஓர் விருது முத்திரையாய்
என் கரத்தினில் தவழ்ந்தது....
அந்த வானமே கிழியும் அளவுக்கு
கத்தினேன் கர்ஜித்தேன் உறுமினேன்
உணர்ச்சிகளை அணுகுண்டாய்
வார்த்தைகளில் வெடிக்க வைத்தேன் ...
சூழ்ந்து நின்றவர்களின்
கண்களில் கங்கைப் பிறந்தது
கரங்களின் ஓசையில்
மலைகளும் மண்ணானது ...
எத்துனை அவமானம்
எத்துனை இழிவு சொற்கள்
அத்துனையும் இன்று என் கழுத்தினில்
மாலையாய் விழுந்தது ...
சோதனைக்குப் பின்
அடைந்த சாதனையில் தான் தெரியும்
கிடைக்கப்பட்ட அங்கீகாரத்தின்
அருமை என்னவென்று ...
என்னை பொருத்தவரையில்
விருது என்பது ஒரு போதை
அதனை அதிகம் பருகியவர்களே
பின்னாளில் மேதை ...