தமிழா தமிழா

தமிழா தமிழா
உணரவில்லையா நீயும்
அழவில்லையா உள்ளமும் !

தமிழா தமிழா
பார்வையில் படுகின்றதா
பலியானவரின் உடல்கள் !

தமிழா தமிழா
பக்கத்து நாட்டிலும் நடந்தேறியது
பக்கத்து மாநிலத்திலும் நிகழுதே !

தமிழா தமிழா
இனத்தையே அழித்தான் சிங்களவன்
இதயமின்றி சுடுகின்றனர் இங்கேயும் !

தமிழா தமிழா
ஒன்றிடவில்லையே நம்மினமும்
வென்றிடவில்லையெ தமிழனும் !

தமிழா தமிழா
அடிபணிந்தே செல்கிறோம் நாமும்
இடியென தாக்கினாலும் இனத்தை !

தமிழா தமிழா
கூடிப்பேசுகிறோம் கலைகிறோம் நாம்
கூறுகூறாகிறோம் குனிந்த தலையுடன் !

தமிழா தமிழா
பகுத்தறிந்து பாதையை வகுப்பதில்லை
பயனறிந்து பயணமும் செல்வதில்லை !

தமிழா தமிழா
நமக்குள்தான் எத்தனை வேறுபாடுகள்
நம்மிடையே ஏன்மாறுபட்ட பிரிவுகள் !

தமிழா தமிழா
சிந்தனையை ஓடவிடு ஒருநொடி
சிதறிவிடாதே சிறுசிறு கூட்டமாய் !

தமிழா தமிழா
இனத்தை இனியேனும் அழிக்கவிடாதே
இனம்காக்க இணைந்திடு அகிலமெங்கும் !

தமிழா தமிழா
மொழியால் இணைந்திடுவோம் நாமும்
வழியொன்றை காண்போம் வாழ்ந்திடவே !

தமிழா தமிழா
கரித்திடா கடல்நீரும் பூமியில்இல்லை
உணர்விலா உயிர்களும் உலகில்இல்லை !

தமிழா தமிழா
புரிந்து செயல்படுவீர் உள்ளவரை
புவிதனில் தமிழினம் தழைத்திட !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (27-Apr-15, 3:35 pm)
Tanglish : thamila thamila
பார்வை : 406

மேலே