சற்று பொறுங்கள்-----------அஹமது அலி-------------------

மின் சமிக்ஞைகள்
நாற்சந்தியில்
மூன்று வண்ணங்களில்
நிறம் மாறி மாறி ஒளிர்ந்தன....
0
0
சிவப்புக் கண் வெடிக்க
வாகனங்கள்
வரிசை முறையை
அனிச்சையாய் அமல்படுத்தின...
0
0
அறுபது நொடிகள்
பொறுக்க முடியா
அவசர மனங்களை
அமைதியின் வழி
அச் சமிக்ஞைகள்
ஏதோவொரு விதத்தில்
கட்டுப்படுத்தியிருந்தன...
0
0
வெள்ளைக் (எல்லைக்) கோட்டையும்
தாண்டிய நிலையில்
தன் அவசரங்களை
அம்பலப்படுத்தினர் சிலர்...
0
0
வரிசையின் ஊடாக
ஊடறுத்து ஊர்ந்தபடி
இரு சக்கர வகனமோட்டிகள்
அவசரத்தில் முதலிடம் பிடிக்க
முந்திக் கொண்டனர்.....
0
0
பரபரத்துக் கிடந்தன
அத்தனை கண்களும்
பச்சை சமிக்ஞையின்
கண் திறப்பிற்காக...
0
0
பச்சை ஒளிர்ந்தது தான் தாமதம்
தாமதிக்கவில்லை
ஒழுங்கு முறை குலைந்து
ஒழுங்கீனத்தில்
சீறிப் பாய்ந்தனர்...
0
0
அம்மா அப்பாக்களை
பரஸ்பரம் வசை பாடி
நாகரீக சாயங்களை
வார்த்தையில் தெளித்தனர்...
0
0
சற்று தொலைவில்
அவசர வாகை சூடி
அநியாயமாக அவசரத்தில்
தம் உயிரை விட்டிருந்தார்....
0
0
பின் வரிசையினர்
பாவம் பரிகசித்து
தம் பொறுமையை தாமே
போற்றிக் கொண்டனர்...
0
0
அவசரத்தின் விலை
உயிராகவும்
இருக்கக் கூடுமென்றது
அவர்களின் மனம்..

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (2-May-15, 9:52 am)
பார்வை : 153

மேலே