விவசாயி

காணத்தான் முடியுமா காட்சிதனை ---
இன்பமும் பொங்கிடுமா இதயத்தில் !
விழிகளுக்கும் விருந்தாகுமா இனியும் ---
இயற்கையும் மருந்தாகுமா மீண்டும் !

உச்சிவெயில் உடலை தீய்த்தாலும் ---
உழைப்பவர் என்றும் சோர்வதில்லை !
உழைக்கும் மக்கள்மேனி தேய்ந்தாலும் ---
உழைக்கும் வர்க்கம் ஓய்வதில்லை !

வியர்வை வழிந்திட உழைத்திடுவான் ---
அயர்ந்திடா விவசாயி நாளும் !
உழுது பயிரிட்டால்தான் நமக்குணவு ---
உழவன் குடும்பத்திற்கும் வாழ்வு !

விளைநிலமாய் இருந்தது பொற்காலம் ---
அடுக்குமாடிகள் ஆனது பொல்லாகாலம் !
விளைநிலத்தை தேடுகின்றான் விவசாயி -
அலைந்து திரிகின்றான் வேலையின்றி !

பசுமையாய் கண்டது பழங்காலம் ---
பாலையாய் மாறியது நிகழ்காலம் !
கண்ணீர் விடுகின்றனர் விவசாயிகள் ---
மடிந்து விழுகின்றனர் வழியின்றி !

கட்டிடங்கள் உயர்வதால் பலனில்லை ---
கட்டிளங் காளைகளுக்கு புரியவில்லை !
விஞ்ஞான முன்னேற்றம் தேவைதான் ---
விளைநிலம் அழித்தல்ல வழியது !

உணவளிப்பவன் உலகிற்கே விவசாயி---
உணவின்றி வாடுகின்றான் இன்றோ !
உயிர்கள்வாழ உழைப்பவனே விவசாயி ---
உயிரில்லா உடலாய் உலவுகின்றான் !

வல்லரசாய் மாறினாலும் எந்நாடும்---
வளர்ச்சியே நோக்கம் என்றாலும்
வாழ்ந்திடநாம் தேவை விவசாயி---
வளர்ந்திட வேண்டும் விவசாயம் !

நாடித்துடிக்க பழுதிலா இதயம்தேவை ---
நாடுமலர உழுதிடும் நிலம்தேவை !
தழைத்திடவே விவசாயம் தரணியில் ---
தளராநிலை பெறவேண்டும் விவசாயி !

உலகிற்கே உயிர்நாடியாம் விவசாயி ---
உவகையுடன் வாழ்ந்திட வேண்டும் !
வளமுடனே வாழ்ந்திட வையகமும்---
நலமுடனே வாழவேண்டும் விவசாயி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (5-May-15, 2:59 pm)
பார்வை : 965

மேலே