தங்கையே தாயாய்
உனக்கு திருமணம் செய்து அனுப்பி வைக்கும் போது கூட
ஏற்படாத பிரிவும் வலியும் இன்று
உன்னை பிரிந்து உன் வீட்டில் இருந்து
திரும்பும் போது மனதை ஒருசேர பிளக்கிறது..
ரயிலில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
நிறைய பேர் எதிரிலும் ஜன்னலின் வழியும்
என் விழிகளில் விழுந்து செல்கின்றனர்.
ஆனால் மனமெங்கும் அண்ணன் தங்கையாக
நானும் நீயும் சண்டைக்காக சமாதானமும்
சமாதானதிற்காக சண்டையும் இட்ட நினைவுகளும்
எனக்காக நீ செய்த சிறுசிறு தியாகங்களும்
என்னுள் உறைந்து கிடக்கும் கண்ணீர்த் துளிகளை
உயிர்ப் பெற வைக்கின்றன..
நீ திருமணம் முடித்து போன போது வீடெங்கும்
உன் நினைவுகள் நிரம்பி வழிந்தன.
உன்னை பிரிந்து செல்லும் இத்தருணம்
என் உயிரை உன்னுடனே விட்டு
வெறும் உடலை மட்டும்
கரையேற்றுவதைப் போல் உணர்கிறேன்..
ஒவ்வொரு பெண்ணும் தாய்
என்பதை ஏற்கனவே அறிவேன்..
என் தங்கையும் எனக்கு தாய் தான்
என்பதை இன்று தான் உணர்ந்தேன்..