வாழ்வு வரும் --படம்பார்த்து கவிதை சொல்லுங்கள் போட்டிக் கவிதை

ஏவு கணையிலக்கில் இல்ல உறவுகளை
காவு கொடுத்து கலங்கியே –நாவுக்
குணவின்றி ஏங்கிக் குமுறும் அழகு
அணங்கிற் கபயம் தெரு.

அழகென்னும் ஆபத்து அங்கத்தில் மிஞ்ச
பிழைசெய்த தெய்வ சதியால் –நிழலிழந்த
நேரிழை நிற்கும் நடுத்தெரு நிர்க்கதி
போரிலே பெற்றப் பரிசு

இல்லா இவள்தன் இடுக்கண் தொடர்கதைக்கு
பொல்லா கருவை படைத்தவன் –கல்லாய்
சமைந்திருக்கும் காரணத்தை சிந்திக்கத் தானோ
அமைத்தான் அகதி நிலை?

அதிர்ந்த நிலத்து அழகு மரத்தில்
உதிர்ந்த மலரோ புயலை –எதிர்க்க
அமர்ந்த தெருவோரம் ஆங்காங்கே கண்ணால்
கமழும் கழுகின் மணம்

அழுகிய தேகம் அழகோடு உண்ணும்
கழுகின் விழிமுன் கிடக்கும் –அழகே
மரணத்திற் கஞ்சாமல் மானத்தைக் காக்க
கரணம் அடிக்கப் படி

நடந்ததை எண்ணி நடைப்பிண மாகக்
கிடப்பதை விட்டுக் கிளர்ந்து –படபடக்கும்
பட்டாய் சிறக்கடித்துப் பார்நீ .முயற்சித்தால்
கட்டாயம் வாழ்வு வரும்.

மெய்யன் நடராஜ் .

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (9-May-15, 2:26 am)
பார்வை : 88

மேலே