அன்றொரு நாள்

அன்றொரு நாள்...
பின்னிரவில்
புத்தகத்து மயிலிறகோடு
புதிதாக இன்னொன்றை
புன்னகைத்து வைத்தாயே?
இறகு குட்டி போடும் என்பது என்
இளவல்களின் நம்பிக்கை என்றாயே?

அடுத்த நாள்...
ஆளுக்காள் குதித்தனரே மகிழ்ச்சியில்...
ஒன்றும் தெரியாதது போல்
நீயும் குதித்தாயே?

வீட்டுச் சூழலை நொடியில் மாற்றுகிறாய்..
இன்று
வேறொருத்தியிடம் மனதை விட்டு..

“அம்மா என்பதால் அம்மா...
அண்டை வீட்டு அக்கா
அக்கா என்பதால் அம்மா இல்லை ! !”

பிள்ளைகள் சொன்னதை மறந்தாயா?
பிஞ்சுகள் நம்பிக்கை சிதைப்பாயா?

தாரத்தின் இடத்தை தாரை வார்க்க எண்ணலாம்;
தாயின் இடத்தை என்ன செய்வாய்?

அப்பா அப்பா என்று அரற்றுவது கேளாயா?
வீம்பு செய்ய மாட்டேன்,
வீடு வாங்களப்பா என்று
பிதற்றுவது கேளாயா?

நிலை வாசல் படியமர்ந்து
நிலை குலைந்த குழந்தைகளை
நிர்க்கதியாய் நிறுத்த அவள்
நீலியா? ரதியா? என் விதியா?

பாச நெஞ்சத்தை மாற்ற வல்லதா
பளிங்குத் தோல் மோகம்?

அக்கம் பக்கம் கேட்கிறார்,
அதிகப்படி வேலையென்றால்
அவள் வீட்டிலா என்கிறார்...

தலை நிமிர முடியவில்லை - உன்
தவறுக்கு தண்டனை எனக்கா?

நான் தந்து நீ அடைந்தாய்
நாலு புறம் நன்மை;
நான் தராத ஆயிரம்
அவள் தருவாள் – உண்மை.

பழி தருவாள்; பாவம் தருவாள்
பால் வினை நோய் தருவாள்
கிலி தருவாள்- இலவு காத்தக் கிளியெனும்
நிலை தருவாள்.
வழிய வழிய உறிஞ்சி விட்டு
வாசல் தள்ளி கதவடைப்பாள்..!

கண்ணகிக்குப் பிள்ளை இருந்தால்
மதுரையா எரிந்திருக்கும்?

விழி நீருக்கும் வேதனைக்கும்
விடையில்லை என்றால்... .....................

வெட்டரிவாள் இருக்கிறது;
வீடு வந்து சேர்ந்து விடு !

எழுதியவர் : அருணை ஜெயசீலி (9-May-15, 12:44 pm)
Tanglish : androru naal
பார்வை : 73

மேலே