எழுதவேண்டிய காவியமும் அல்ல
விண்மீன்கள் பூத்திருக்கும் நடுநிசி பொழுதில்
--தழுவாத உறக்கத்தால் தவித்திட்ட வேளையது !
வலியின்றி பிரசவித்த வசந்த நினைவுகளால்
--புரையோடிய செல்களும் புத்துயிர் பெற்றன !
பள்ளிக்குச் சென்று பவிசாய் திரும்பியதும்
--பதுங்கிடுவேன் வீட்டில் பதுமையாய் என்றும் !
கட்டுடலைக் காத்திட முயற்சியோ பயிற்சியோ
--கனவிலும் செய்தவன் இல்லை அடியேன் !
அடிபதித்தேன் பொடியனாய் கல்லூரி வாசலில்
--ஆடிப்பாடி மகிழ்ந்தோம் அன்றாடம் நண்பர்கள் !
களிப்புடனே கடந்தாலும் இறுதிநாளும் வந்ததால்
--கண்ணீருடன் பிரிந்தோம் அவரவர் பாதையில் !
மறக்கத்தான் முடியுமா கல்லூரிக் காலத்தை
--மறுக்கத்தான் முடியுமா அனுபவித்த எவருமே !
இளமைப் பொழுதோ இனித்திடும் பொற்காலம்
--இனியும் வந்திடுமா மீண்டும் வாழ்விலும் !
பணிகள் வாயிலாக பயின்றேன் அனுபவங்கள்
--முக்கனி சுவையே முப்பொழுதும் உள்ளத்தில் !
போதுமென்ற மனதே பொன்செய் மருந்தாய்
--விருப்ப ஓய்வில் விரைந்து வந்திட்டேன் !
அன்பும் பண்பும் நிறைந்திட்ட நெஞ்சங்களால்
--அக்காலம் நற்காலம் அளவிலா ஆனந்தம் !
மனிதமும் நேர்மையும் மக்களோடு வாழ்ந்ததால்
--மண்ணிலே அமைதி மனதிலே மகிழ்ச்சி !
சுயசரிதம் கூறவில்லை நிச்சயமாய் நானும்
--என்கதை எழுதவேண்டிய காவியமும் அல்ல !
நிசப்த இரவினில் நிழலாடிய நினைவுகளை
--நட்புடன் பகிர்ந்தேன் பண்பலை வானொலியாய் !
காலத்தை கடத்திடவே கவிதைகள் எழுதுகிறேன்
--உள்ளவரை எழுதுவேன் உள்ளத்து உணர்வுகளை !
அறிந்தவரை எழுதுவேன் அறிவிற்கு எட்டியதை
--அன்னத் தமிழைக் காத்திடுவேன் ஆயுள்வரை !
பழனி குமார்