கைமாறு ஏது செய்ய தாயே

பசி,துன்பம்,பகல்,இரவென பல மறந்து
வலி சுமந்து எனைப் பெற்றவளே
கைமாறு ஏது செய்ய?
என் பசிக்கு நீயுண்டு
தொப்புள் கொடிவழி எனக்கூட்டி
ரத்தம் சதை இதயம் முதல்
முடி மூளை நகம் வரை தந்தவளே
கடவுளும் ஈடோ உனக்கு?.
வயிற்றுக்குள் கூடு கட்டி
மனம் எல்லாம் என்னை நிரப்பி
தொந்தி பெருக்கத் தவம் கிடந்து பெற்றவளே.
வெளிவரும் வழி தெரியாது
வலி அதிகம் கொடுத்துவிட்டேன்.
மன்னிக்க வேண்டுகிறேன்-சிறு மூளைக்காரன்.
நான் அழுகிற போது உணவானாய்
எனக்கு குளிர்கின்ற போது உடையானாய்
நான் துயில் கொள்ளும் வேளையில் பாயானாய் .
உயிர் சுமந்தவள் நீ
உருவம் கொடுத்தவள் நீ.
மார்பூட்டி எனை வளர்த்தவள் நீ.
எப்படி புரிகிறது உனக்கு என் அழுகைமொழி
வலிக்கா? இல்லை பசிக்கா? என்று.
ஈறுகள் கீறி பல் வளர்த்தவள் நீ.
பின் உன் கைவிரலையே கொடுத்து கடிக்கக் கற்றுக் கொடுத்தவளும் நீ
வா வா என அழைத்து நடை பழக்கியவள் நீ
நான் கீழே விழுந்து அழுகையில் என் கண்ணீர் துடைத்து கண்ணீர் விட்டவளும் நீ.
குரல் கொடுத்தவள் நீ
தமிழ் கொடுத்தவள் நீ.
நிலவும் தூரமில்லை என அறிவியல் கற்று தந்தவளும் நீ.
தத்துவத் தமிழ் கதைகள் பல கூறி எனை செதுக்கியாவளும் நீ.
பின் எப்படி செல்லும் தகப்பன் மேல் பாசம்.
காலம் முழுதும் கழுதையென உனக்கு நான் உழைத்தாலும்
கால் அளவு தாண்டாது கைமாறு.
கைமாறு ஏது செய்ய தாயே?
உன் கனவை வரிசைப்படுத்து;
வயப்படுத்துகிறேன்.
உன் ஆசைகளை வெளிப்படுத்து;
நிஜப்படுத்துகிறேன்
எனக்கு உன்னிடம் கேட்க இன்னும் ஒரு ஆசை.
செவி கொடு தாயே.
மறு பிறவி நீ கொண்டால்,
எனக்கு மகளாகு; இல்லை
என் புதை குழி தலைமாட்டில் மரமாகு.
என் உடல் உனக்கு உரமாகாட்டும்;
உன் உடல் எனக்கு நிழல் ஆகட்டும்