இறந்துபோன தங்கைக்காக

பாதி இரவில் அனாதையாக்கப்படும் தலையணைக்கு சண்டையிட்ட இரவுகள்...

இல்லாத பேய்க்காக நாம் பயந்து நடுங்கிய பல இரவுகள்...

தூக்கத்தில் நான் நனைத்த போர்வைக்கு நீ வாங்கிய திட்டுக்கள்...

எனக்கு பிறகும் உறங்கிக்கொண்டிருக்கும் உன்னை ஆசை தீர கில்லிக்கொண்ட காலை பொழுதுகள்...

தூக்கத்தில் வாய்க்கும்,காதுக்கும் நீ கட்டி முடித்த எச்சில் பாலத்தை கிண்டல் செய்த தருணங்கள்...

தாத்தா மூட்டிய நெருப்பில் ஜோடியாய் குக்குள் வைத்து அமர்ந்து குளிர்காய்ந்த நினைவுகள்...

குளிப்பதற்காக நீ நடத்தும் போராட்டத்தை உன்னை பிடித்து கொடுத்து முடித்து வைத்த சாதனைகள்...

நீ அசரும்போது எனது தட்டில் உள்ள கருவேப்பிள்ளையையும்,மிளகாயையும் உனக்கு இடமாற்றிய பெருமைகள்...

இளையவள் என்பதற்காக ஒவ்வொரு முறையும் உனக்கே கிடைக்கும் ஜன்னலோர பஸ் சீட்டுகள்...

கைகளில் கட்டிவிட்ட காகித வாட்ச்’களுக்கு இணையாக கால்களுக்கும் கேட்டு அடம்பிடித்த உன் குறும்புத்தனங்கள்...

வலிக்காத என் அடிக்கு அப்பாவிடம் என்னை மாட்டிவிட்ட உன் சிணுங்கல்கள்...

மணல்வீடு,பட்டம்,காகித பொம்மை இப்படி நான் எதைச்செய்தாலும் பக்கத்தில் உனக்கொன்று குட்டியாய் செய்ய சொல்லும் உன் இம்சைகள்...

நான் வளர்ந்துவிட்டதை உணர்த்திய உன் புனித விழா அழைப்பிதழில் அண்ணனாக என் பெயர் எழுத்துக்கள்...

வயதுவந்த பின்னும் உன்னை தொட்டுபேசி விளையாடும் உரிமையின் கர்வங்கள்...

விலகிய தாவணிக்கு என்னிடம் திட்டுவாங்கும் உன் அஜாக்ரதைகள்...

உன் தேவைகளுக்காக அவ்வப்போது தரும் அளவில்லா அண்ணன் மரியாதைகள்...

இந்த வரிகளுக்கெல்லாம் சொந்தக்காரி இவை அனைத்தும் நிகழ்வதற்கு முன்னதாகவே இறந்து விட்டால் என்பதை என் மனதிற்கு எப்படி புரிய வைப்பது....!

மிஞ்சிய பிறந்தநாள் இனிப்பிற்காக எஞ்சிய அண்ணன்களை தேடும் என் தெரு தங்கைகளுக்கு அன்று மட்டும்தான் அண்ணனாய் இருக்க முடியும் என்பதை என் மனதிற்கு எப்படி புரிய வைப்பது....!

பேருந்து நிறுத்தத்தில் தினமும் சந்தித்து வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்றழைக்கும் பள்ளிமாணவி கூட அப்பா உடன் இருக்கையில் மட்டும் என்னை நாடு கடத்தி பாகிஸ்தானி ஆக்கி விடுகிறாள்..

நெரிசலில் தெரியாமல் இடித்துவிட்டு “sorry அண்ணா” என்றவள் ‘அண்ணாவையும்’ தெரியாமல்தான் சொல்லிருப்பாளோ.....

நண்பனின் தங்கை.., தோழியின் தங்கை.., நண்பனின் காதலி.., காதலியின் தோழிகள்....., இப்படி பார்ப்பவர்களை எல்லாம் அரை நொடியேனும் இந்த கவிதைக்கு சொந்தமாக்கி பார்க்கும் என் மனதிற்கு எப்படி புரிய வைப்பது....!
இவர்களின்..,
நேர்படும்போது சம்பர்தாயத்திற்க்கான புன்னகையும், உதட்டளவில் மட்டும் ‘அண்ணா’ உச்சரிப்பும், என் தங்கையின் ஆறிய காயங்களை கீறி விட்டு செல்கின்றன என்பதை....

கீறிய காயத்திற்கு ஒரு ரூபாய் மருந்தாய் தினம் தினம் சிக்னலில் எத்தனையோ தங்கைகள்........
ஆனால் அவர்களுக்கும் எப்படி புரிய வைப்பது நான் தரவில்லை பெற்றுக்கொள்கிறேன் என்று(அண்ணன் பிச்சை)...

எழுதியவர் : Jay (11-May-15, 8:28 pm)
பார்வை : 1407

மேலே