தந்தைக்கு ஒரு கடிதம்
(அம்மா என்றழைக்காத உயிரில்லையே..சந்தம் ) ..
உன்னாலே உயர்கின்ற நிலை வந்ததே
எந்நாளும் மறவாத மனம் வந்ததே
எனை நீயே .. காக்கும் தெய்வம்
உந்தன் அருளின்றி எனக்கிங்கு வாழ்வு ஏது?
தமிழாலும் மனதாலும் களிப்போடு கவிபாட
உனதன்பு முகம் போதும் உணர்ந்தேனப்பா..
பொருள் சேர்க்கும் வழிகூட எதுவாக இருந்தாலும்
அதில் நேர்மை கொள் என்று உரைத்தாயப்பா
எனக்கென்று வரமொன்று கொடுத்தாலும் நான் உந்தன்
நிழல் வாழும் நிலை என்றும் தருவாயப்பா..
அது போதும் ..அது போதும் !
உரம் தன்னை எனக்களித்து உருவாக்கி எனைப் பிரிந்து
நீ சென்ற வழி யாவும் தொடர்ந்தேனப்பா..
உன் வழி மீது விழி வைத்து நின்றாலும் நடந்தாலும்
எனக்கிங்கு ஒரு துயரம் இருக்காதப்பா....
நீயின்றி நானில்லை உனதன்பு எனதெல்லை
உனையன்றி என் வாழ்வில் துணை ஏதப்பா..
உன்னாலே ..உயர்வேனே !