வாழ்க்கையின் விலை முக்காதுட்டு

பின்னால்
நடந்து வந்தாள்
திரும்பிய நான்
அவள் பின்னால்
நடந்தேன்.

கீழே உருண்டு
அழுதாள்.
நானும்
கீழே உருண்டு
அழுதேன்.

எழுந்தவள்
கன்னத்தை உப்பி
முறைத்தாள்.
நானும் எழுந்து
கன்னம் உப்ப
முறைத்தேன்.

அப்பா என்று
கத்தினாள்.
நானும் அப்பா
என்று கத்தினேன்.

சாப்பிட மாட்டேன்
என்று தட்டை தள்ளினாள்.
சாப்பிட மாட்டேன் என்று
நானும் தட்டை தள்ளினேன்.

லூசாப்பா நீ என்றாள்.
லூசாப்பா நீ என்றேன்.

அம்மா அப்பாக்கு
பைத்தியமா?
அம்மா அப்பாக்கு
பைத்தியமா?

என் வயிற்றில் குத்தி
சிரிக்க ஆரம்பித்தாள்.

அப்படின்னா
கதை சொல்வியா
உப்பு மூட்டை தூக்கிவியா
பில்லோ ஃபைட் போடுவியா
அடுக்கினாள் கோரிக்கைகளை.

எல்லாவற்றுக்கும்
சரி என்ற அந்த
சத்தியத்திற்குப் பின்
அவள் மறந்துவிட்டாள்
என் செல்பேசியை.

ஒரே தொடுதலில்
நீக்கிவிட்டேன்
சொன்னதைச் சொல்லி
கிச்சிமுச்சூட்டச் சிரிக்கும்
பூனைப் பொம்மை விளையாட்டை.
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (14-May-15, 11:36 pm)
பார்வை : 116

மேலே