பிரம்ம தேவனாகிய நான்

அப்பனை அப்படியே
உரிச்சு வச்சிருக்கியேடீ
திருஷ்டி சொடுக்கிச்
சிரிக்கிறாள் அம்மா
அண்ணே பாரேன்
அப்படியே அண்ணியின் சாடை
அதிசயிக்கிறாள் தங்கை
இப்படிப்பார்த்தால் அப்பா சாடை
அப்படிப்பார்த்தால் அம்மா சாடை
இது பக்கத்துவீட்டு மாமியின்
பாதுகாப்பான தீர்ப்பு
எனக்கென்னவோ
இது அம்மாதான்
சேனைத்தண்ணீர் வைக்கும்போது
தாத்தா கொஞ்சம் குலுங்கினார்
பாட்டி தெரிந்தாள் போலும்
மயக்கம் தெளிந்தமுதல்
எல்லா சாடைகளையும்
குழந்தை வழியாகத்தான்
பார்த்துக்கொண்டிருக்கிறாள்
மனைவி
தெய்வத்துக்கு சொல்லும்
நன்றியையும்
அதனிடமேதான் சொல்கிறாள்
சற்றே நினைவு வந்தவளாய்
என்னை அருகழைத்து
எப்படி நம் படைப்பு என்று
பெருமிதத்தில் குசுகுசுக்க
ஒட்டுக்கேட்ட பிரம்மதேவன்
தமிழக மந்திரிபோல்
படைக்கும் பதவி
பாதியில் பறிக்கப்பட்டுவிட்டதோ என
பதறியடித்து ஓடுகிறான்