ஒப்புரவு

சேற்றில் இறங்கி
நாற்று நடும் போது
எதிரெதிர் வீட்டு
வசந்தா அக்காவுக்கும்
காளி மதினிக்கும்
வந்த சண்டையில்
களமே நாறிப்போனது...
அறுபது அடி கிணற்றில்
தண்ணீர் தேடிய வாளிகள்
முட்டிக் கொண்டு கயிறு அறுந்தபோது
வந்த வாய்த்தகராறு வாளி வாளியாய்
அள்ளக் குறையாதது...
மழைக்காலம் வந்துவிட்டாலோ
வாய்க்கால் கழிவு நீர்
வாசலில் கசியும் போதெல்லாம்
வசவுகள் தலைமுறை தாண்டிப் பெருகிப் போகும்...
இருந்தும்...
வசந்தா அக்காவின்
மூத்த மகனின் முகூர்த்த கால் நடுவதற்கும்
பெரிய அப்பத்தாவின் சாவுக்கும்
பந்தலிட்ட சவுக்கு மரத்துக்கு
காளி மதினி வாசலில் தான் குழி தோண்டப்பட்டு
இரு வீட்டுக்கும் நிழல் பரப்பப்பட்டது...
கூடுதலாக
வந்திருந்தவர்களுக்கு
சொம்பு நெறைய தண்ணீரும்
கும்பா நெறைய கம்பஞ் சோறும்
கருப்பட்டி காப்பியும்
தந்து உபசரித்ததும் மதினி தான்..
உலகம் வண்ணமயமான
இந்த காலத்தில்
வாட்ஸ் அப்பில் சிரமமில்லாமல்
ஒரு தொடுதலில்
அடுத்தவரின் அந்தரங்கத்தை
பகிர்ந்துண்டு பசியாறிக் கொண்டிருக்கிறது
பல்லுயிர் ஓம்பிய சமூகம் இன்று.