ஏதோ ஒன்று

புல் மட்டுமே உண்ணும்
சைவ ஆடுகளுக்கு
கசாப்புக் கடைகளுக்கு செல்லும்வரை
தெரிவதே இல்லை தாம்
அசைவம் என்று...

இயற்கை எழிலோடிருக்கும்
எல்லா மலைகளுக்கும்
வெடிக்கும் வரை
விளங்குவதே இல்லை தாம்
எரிமலை என்று...

மரமாகி நிற்கும் மரங்கள்
வெட்டும் வரை தன்னை
விட்டுக் கொடுத்ததே இல்லை
கோடரிக் காம்பைக் கொடுத்து
குலத்தைக் கெடுத்தது தாமென்று...

வாழ்வதற்கு வீசும் காற்றுக்கு
புயலாக மாறும் வரை
புரிவதே இல்லை
வீழ்வதற்கும் தாம்தான் காரணமென்று...

எல்லாம் வழங்கும் பூமிக்கு
பூகம்பம் வரும் வரை
புலப் படவே இல்லை
வழங்குதல் மட்டுமல்ல
விழுங்குதல் என்பதும்
தனக்குள் இருக்குமென்று...

அமைதியாக அடிக்கும் அலைகளுக்கு
சுனாமியாக சுழன்று அடிக்கும்வரை
சுத்தமாக தெரியாது
அலையடித்தாலும் வலிக்குமென்று...

தன் வீட்டில் வளர்க்கும்
செல்ல நாய்க் குட்டிக்கு
சட்டைப் போட்டு ரசிக்கும்வரை
எவனுக்கும் எட்டுவதில்லை
ஆடைக் குறைப்பில்
அழகிப் போட்டி நடத்துகிறோமென்று...

தம் பார்வை செலுத்திய திசையில்
ஏதோ ஒரு பெண் தன்
சேலையை சரிசெய்யும் நிலையிருக்கும் வரை
யாராலும் சொல்ல முடியாது
தாம் நல்லவரென்று...

எழுதியவர் : ஜின்னா (18-May-15, 4:07 am)
பார்வை : 262

மேலே