அதே மன்னர்கள்தான் ஆனால் இப்போது
மன்னனின் தேர்க்கால்கள்
ஹை ஸ்பீடில் தெருஓடி
கன்றுகளை காவு கொள்ளும்
கதையொன்றும் புதிதில்லை
ஆராய்ச்சி மணியடித்தால்
அதிரடியாய் தீர்ப்புசொல்ல
மன்றத்தில் இல்லை
மனுநீதி சோழர்கள்
புறாவை பங்குபோடும்
பேரங்கள் முடிவடைந்து
பருந்துடன் ஒப்பந்தத்தில்
கையெழுத்தும் போட்டுவிட்டான்
கொடைமடத்தான் சிபிமன்னன்
நிழல் தரும் மரங்களையும்
வளம் தரும் குளங்களையும்
இருந்த இடம் தெரியாது மேவி
புதுசாய் ப்ளாட் போட்டு
புக்கிங்கும் தொடங்கிவிட்டான்
அசோகமன்னன்
ஐந்துக்கும் பத்துக்கும் உண்டியல்வைத்து
கையேந்தி நின்ற தேவாதிதேவர்கள்
அந்நியச்சந்தையில் அநியாயவிலைபோக
இப்போது
சிலைதிருடிச் சில்லறை குவிக்கிறார்கள்
கோவில்பல வளர்த்த ராஜாதிராஜன்கள்
பரங்கிப்படையிடம் பாஞ்சாலங்குறிச்சியை
பாதிக்குப்பாதி பேரத்தில் முடித்துவிட்டு
எட்டப்பன் கூட்டிய கார்ப்பரேட் மீட்டிங்கில்
பத்திரம் மாற்றுகிறான் பராக்கிரமன் கட்டபொம்மு
கணிப்பில் தவறுசெய்து
கணக்குத்தவறி தீர்ப்பெழுதி
கோவலன் உயிர்குடித்த
மக்கள் மன்னன் நெடுஞ்செழியன்
மன்னுயிர் நீங்காது
மன்னனாய் நீளுகின்றான்
வல்லராசாகுமென்று வழிவழியாய் சொல்லிவரும்
கற்பனைக்கனவுகளில் கடைவாயில் நீரொழுக
கிரீடம் கழற்றாமல் தூக்கம் தொடர்கின்றான்
இந்தியப்பிரஜை என்னும் இந்நாட்டு மன்னன்